1.6K
ஈழத்தமிழ் சினிமா கலைஞர்களை தொடர்ந்தும் ஆதரித்து வரும் குவியம் ஊடகம் இரண்டாவது தடவையாக ஏற்பாடு செய்திருந்த “குவியம் விருதுகள் 2023” நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ். தந்தை செல்வா கலையரங்கில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படங்கள், குறும்படங்கள், காணொளிப்பாடல்கள் மற்றும் ஆவணப்படங்களில் இருந்து வெற்றியாளர்கள் தெரிவு செய்யப்பட்டு விருதுகள் வழங்கிக்கௌரவிக்கப்பட்டன. (இதற்கான விண்ணப்பங்கள் கடந்த மே மாதம் கோரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது).
இன்றைய இளசுகளின் இதயம் வென்ற “ரப் சிலோன்” குழுவினரின் கலக்கல் பாடல் மற்றும் “காங் எக்ஸ்” குழுவினரின் அனல் பறக்கும் நடனம் என பல கலை நிகழ்ச்சிகளும் இந்த விழாவில் அரங்கேறியது. அது மட்டுமல்லாது காரை சிவநேசனின் இயக்கத்தில் விரைவில் வெளியாகவிருக்கும் “புஷ்பக27” என்ற திரைப்படத்தின் ட்ரெயிலரும் நிகழ்வில் வெளியிடப்பட்டது.
அத்துடன், ஈழத்தமிழ் சினிமாவுக்கான தனித்துவத்தையும் அடையாளத்தையும் வேண்டி ஓயாது பயணித்துக் கொண்டிருந்த வேட்கையாளன் அமரர் நவரட்ணம் கேசவராஜா அவர்கள் எம் சினிமாவுக்கு ஆற்றிய சேவையைக் கௌரவிக்கும் முகமாக “வாழ்நாள் சாதனையாளர்” விருதும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.
அமரர் கேசவராஜா சார்பாக அவரது துணைவியார் மற்றும் மகன் ஆகியோர் அந்த கௌரவத்தினை பெற்றுக் கொண்டனர். மேலும், மூத்த சினிமா கலைஞர்கள் ஐவரும் கௌரவிக்கப்பட்டனர். இந்த நிகழ்வில் சினிமா கலைஞர்கள், சினிமா ஆர்வலர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
Spread the love