579
தியாக தீபம் திலீபன் நினைவு ஊர்தி மீதான இனவெறி தாக்குதலுக்கு வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கம் தமது கண்டனத்தை வெளியிட்டுள்ளது. அது குறித்து விடுத்த ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
பொத்துவிலில் இருந்து நல்லூர் நோக்கி சென்றுகொண்டிருந்த தியாக தீபம் திலீபனின் உருவம் தாங்கிய ஊர்தி மீது நேற்று(17) , திருகோணமலை, கப்பல்துறையில் வைத்து இராணுவ புலனாய்வாளர்கள் மற்றும் காவல்துறையினர் சூழ்ந்திருக்க இனவெறி கொண்ட காடையர்களால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை வன்மையாக கண்டிக்கின்றோம்.
தியாகி திலீபன் தமிழ் மக்களின் உரிமைக்காய் காந்தியை விஞ்சிய வகையில் அகிம்சை வழியில் போராடிய போராளியாவார். அவரின் தியாகங்கள் என்றென்றும் அனைவராலும் மதிக்கப்படுவதடன், சர்வதேசத்தினால் அவரது தியாகம் வியந்து பார்க்கப்படுகின்றது.
ஈழத்தமிழர் எதிர்கொள்ளும் சவால்களை உலகறியச்செய்த பார்த்தீபனின் தியாகத்தினை கண்டு சிங்கள பௌத்த தேரர் ஒருவர் கடந்த வருடம் கவிதை இயற்றியிருந்தமை யாவரும் அறிந்ததே.
இவ்வாறான பெருமை மிக்க பெருந்தகையின் திருவுருவப்படத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட திட்டமிடப்பட்ட இனவெறித்தாக்குதல் கண்டிக்கத்தக்கது என்பதுடன் எமது நினைவேந்தல் உரிமை எமக்கு மறுக்கப்பட்டுள்ளதை சர்வதேசத்திற்கு வெளிப்படுத்தி நிற்கின்றது.
மேலும் இவ்வூர்தியில் சென்றுகொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் செ. கஜேந்திரன் மற்றும் அவருடன் பயணித்தவர்கள் மீதான தாக்குதல்கள் இலங்கையில் சிறப்புரிமை கொண்ட, தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கே பாதுகாப்பு இல்லை என்பதனை வெளிப்படுத்தியுள்ளது.
இவ்வாறான சூழலில் உள்நாட்டுக்குள் விசாரணை தீர்வு என்பவை சாத்தியமற்றது என்று நாம் தொடர்ந்து கூறிவருவதன் காரணங்களை சர்வதேசத்துக்கு வெளிப்படுத்தியுள்ளது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Spread the love