பாகிஸ்தானில் மசூதி அருகே இன்று தற்கொலைப் படை தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. இதில் குறைந்தது 52 பேர் கொல்லப்பட்டதாகவும், 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
பலூசிஸ்தானின் தென்மேற்கு மாகாணத்தில் அமைந்துள்ளது மஸ்துங் நகரம். இந்த நகரில் உள்ள ஒரு மசூதிக்கு அருகில், மிலாது நபியை கொண்டாட மக்கள் வெள்ளிக்கிழமை கூடியிருந்தனர். அப்போது அங்கு குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இதையடுத்து, பலுசிஸ்தானில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
இந்த குண்டுவெடிப்பு தற்கொலைப் படை தாக்குதல் என்பதை பலுசிஸ்தானின் காவல்துறைத் தலைவர் அப்துல் காலிக் ஷேக் உறுதிப்படுத்தி உள்ளார். மேலும் தாக்குதல் நடத்தியவரைத் தடுக்க முயன்றபோது மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டதாகவும் அவர் கூறினார்.
மசூதிக்கு அருகே நிகழ்த்தப்பட்டுள்ள குண்டுவெடிப்புக்கு பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் சர்ப்ராஸ் புக்டி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது மிகவும் கேவலமான செயல் என்று கூறியுள்ள அவர், இந்த பயங்கரவாத தாக்குதல்களுக்குக் கடும் கண்டனமும் தெரிவித்துள்ளார்.
மற்றொரு குண்டுவெடிப்பு
இதனிடையே, கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் பெஷாவருக்கு அருகே உள்ள ஹங்குவில் மசூதி ஒன்றில் மற்றொரு குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது.
கைபர் பக்துன்க்வா பகுதியின் காவல்துறை செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “இரண்டு தற்கொலைப் படையினரும், வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட வாகனமும் தடுத்து நிறுத்தப்பட்டன.
அவர்களில் ஒருவர் ஹங்குவில் உள்ள மசூதிக்குள் நுழைய முயன்றபோது நுழைவாயிலில் தடுத்து நிறுத்தப்பட்டார்.
இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்னும் அறியப்படவில்லை, ஆனால் மசூதியின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் ஏராளமானோர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம்,” என்று போலீசார் கூறுகின்றனர்.
இந்த மசூதி 40 முதல் 50 பேர் வரை செல்லக்கூடிய ஒரு போலீஸ் வளாகத்தின் ஒரு பகுதியாகும் என்று உள்ளூர் போலீசார் பிபிசியிடம் தெரிவித்தனர்.
தீவிரவாத தாக்குதலுக்கு இலக்காகும் பலுசிஸ்தான்
ஆப்கானிஸ்தான் மற்றும் இரானின் எல்லையில் அமைந்துள்ள பலுசிஸ்தான், பாகிஸ்தானின் மிகப்பெரிய மாகாணமாகும். தெஹ்ரிக்-இ தாலிபன் பாகிஸ்தான் (TTP) அல்லது பாகிஸ்தான் தாலிபன் மற்றும் இஸ்லாமிய அரசு குழு உள்ளிட்ட ஆயுதமேந்திய போராளிகளின் தாக்குதலுக்கு இந்த மாகாணம் இலக்காகி வருகிறது.
இருப்பினும் வெள்ளிக்கிழமை நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்புக்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என்று தெஹ்ரிக்-இ தாலிபன் அமைப்பு தெரிவித்துள்ளது. இத்தகைய தாக்குதல் தங்களது கொள்கைகளுக்கு எதிரானது என்றும் பாகிஸ்தான் தாலிபன் அமைப்பு கூறியுள்ளது.
இந்த மாதத் தொடக்கத்தில், இதே மாகாணத்துக்கு உட்பட்ட ஒரு பகுதியில் நடந்த குண்டுவெடிப்பில் முஸ்லிம் தலைவர் ஒருவர் உட்பட குறைந்தது பதினொரு பேர் காயமடைந்தனர்.
முன்னதாக ஜூலை மாதம், வடமேற்கு கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் மதவாத அரசியல் கட்சியினர் ஒன்றுகூடிய இடத்தில் நிகழ்த்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதலில் 40க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.