702
பாடசாலைக்கு ஒழுங்கான வரவில்லை என மாணவியை கண்டித்த ஆசிரியர் மீது மாணவியின் தந்தை உள்ளிட்ட இருவர் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை தாக்குதல் நடாத்தியுள்ளனர். யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
பாடசாலைக்கு ஒழுங்கான வரவில்லை எனும் காரணத்தால் பாடசாலை அதிபர் , ஆசிரியர்கள் மாணவியை கண்டித்ததால் , அந்த பாடசாலை நிர்வாகத்துடன் முரண்பட்டு , அந்த பாடசாலையில் இருந்து விலகி, பருத்தித்துறை பகுதியில் உள்ள பிறிதொரு பாடசாலையில் இணைந்து கற்றல் நடவடிக்கையை ஆரம்பித்தார்.
புதிதாக சேர்ந்த பாடசாலைக்கும் மாணவி ஒழுங்காக சமூகமளிக்கவில்லை. அதனால் பாடசாலை ஆசிரியர் ஒருவர் மாணவியை கண்டித்துள்ளார். அந்நிலையில் பாடசாலைக்கு சென்ற மாணவியின் தந்தையும் , பிறிதொருவருமாக பாடசாலை வாசலில் காத்திருந்து , பாடசாலைக்கு வெளியே ஆசிரியர் வந்த போது ,ஆசிரியர் மீது சரமாரியாக தாக்கியுள்ளனர்.
அதனால் காயமடைந்த ஆசிரியர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பருத்தித்துறை காவல்துறையினா் ஆசிரியரை தாக்கிய மாணவியின் தந்தை உள்ளிட்ட இருவரை கைது செய்துள்ளனர்.
Spread the love