அகில இலங்கை ரீதியில் பாடசாலைகளுக்கு இடையில் இடம் பெற்ற கால்பந்தாட்ட சுற்று போட்டியில் தேசிய ரீதியில் இரண்டாம் இடத்தை சுவீகரித்துக் கொண்ட மன் /புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியின் உதைபந்தாட்ட அணியினரை கௌரவிக்கும் நிகழ்வு இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (13) பாடசாலையின் அதிபர் அருட்சகோதரர் சந்தியாகு தலைமையில் இடம்பெற்றது.
இலங்கை முழுவதும் உள்ள பாடசாலை மாணவர்களுக்கான பாடசாலை மட்ட கால்பந்தாட்ட சுற்றுப்போட்டி கடந்த வாரம் இடம் பெற்ற நிலையில் வடக்கில் உள்ள பல முன்னணி பாடசாலைகளை பின்னுக்கு தள்ளி தேசிய ரீதியில் மன்னார் புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியின் உதைபந்தாட்ட அணி இரண்டாம் இடம் பெற்றது.
குறித்த போட்டியில் வெற்றியீட்டிய மாணவர்களை கௌரவிக்கும் விதமாக இன்றைய தினம் (13) காலை மன்னார் பிரதான சுற்றுவட்ட பகுதியில் இருந்து மாலை அணிவித்து பாண்ட் வாத்திய இசையுடன் மன்னார் பிரதான வீதி ஊடாக ஊர்வலமாக பாடசாலைக்கு அழைத்து வரப்பட்டு மதிப்பளிக்க பட்டனர்.
குறித்த நிகழ்வில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான பரிசுகளும் பயிற்சியாளர்களுக்கு பரிசுகள் வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் மன்னார் வலயக் கல்வி பணிமனையின் உதவி உடற்கல்வி பணிப்பாளர் பி.ஞானராஜ் ,விளையாட்டு துறை ஆசிரியர் ஆலோசகர் ஜேக்கப், முன்னாள் அதிபர் ஜூட்,பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள்,பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.