315
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை , மாங்கொல்லை பகுதியில் பயன்தரு மரங்கள் திருடர்களால் தறித்து எடுத்து செல்லப்படுவதுடன் , இரும்பு திருட்டுக்களும் தொடர்வதாகவும் அதனை கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த 33 வருட காலமாக உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தி , இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் மாங்கொல்லை பிரதேசம் காணப்பட்டு வந்தது.
அந்நிலையில் கடந்த ஜூன் மாத காலப்பகுதியில் அப்பகுதியில் இருந்த இராணுவத்தினர் வெளியேறி இருந்த போதிலும் , காணி உத்தியோகபூர்வமாக உரிமையாளர்களிடம் கையளிக்கப்படவில்லை. இராணுவம் வெளியேறிதை அடுத்து, காணிக்குள் ஊடுருவிய திருட்டு கும்பல்கள் காணிகளுக்குள் இருந்த பொருட்கள் , இரும்புகள் என்பவற்றை களவாடி சென்ற நிலையில் வீட்டின் ஜன்னல் , கதவுகளின் நிலைகள் என்பவற்றையும் களவாடி சென்றனர்.
அதனால் காணி உரிமையாளர்கள் தமது காணிகளை துப்பரவு செய்து , காணிகளை அறிக்கைப்படுத்த அனுமதிக்க வேண்டும் என தெல்லிப்பளை பிரதேச செயலரிடம் கோரியதை அடுத்து அதற்கான அனுமதிகளை கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் பிரதேச செயலர் அனுமதித்தார். அதனை அடுத்து காணிகளை துப்பரவு செய்து தமது காணிகளை அறிக்கைப்படுத்தும் நடவடிக்கையி ல் சில காணி உரிமையார்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்நிலையில் வெளிநாட்டில் மற்றும் வெளிமாவட்டங்களில் உள்ள காணி உரிமையாளர்களின் காணிகளுக்குள் செல்லும் திருட்டு கும்பல்கள் , காணி உரிமையாளர் , காணியை தம்மை துப்பரவு செய்ய சொன்னதாக கூறி அக்காணிக்குள் உள்ள பயன்தரு மரங்கள் , பெறுமதியான மரங்கள் என்பவற்றை தறித்து செல்கின்றனர்.
அத்துடன் உரிமையாளர்கள் வராத காணிக்குள் ஊடுருவும் திருட்டு கும்பல்கள் வீட்டில் கதவு , ஜன்னல் நிலைகளை உடைத்து களவாடி செல்லும் நிலை தற்போதும் காணப்படுவதால் , காணி உரிமையாளர்கள் தமது காணிகளை அடையாளப்படுத்தி, துப்பரவு செய்து, அறிக்கை படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியுள்ளனர்.
Spread the love