298
யாழ்ப்பாணம் – கீரிமலை ஜனாதிபதி மாளிகை இதுவரையில் எவருக்கும் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்படவில்லை என நகர அபிவிருத்தி சபையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்றைய தினம் வியாழக்கிழமை இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், ஜனாதிபதி மாளிகை தனியார் பல்கலைக்கழகத்திற்கு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளதாக வெளியான செய்திகள் தொடர்பில் பிரஸ்தாபித்த போதே பணிப்பாளர் அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,
தனியார் பல்கலைக்கழகத்திற்கு வழங்க இருப்பது என்பது திட்ட முன்மொழிவே அன்றி , அது தான் இறுதி முடிவல்ல. மாளிகை தொடர்பில் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்தாலோசித்தே இறுதி முடிவுகள் எடுக்கப்படும் என தெரிவித்தார்.
அதன் போது கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ சுமந்திரன் , கீரிமலை ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள கட்டடம் நாட்டின் பாதுகாப்பு தேவையின் பொருட்டே மக்களிடம் இருந்து சுவீகரிப்பதாக வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டது.
அவ்வாறு இருக்க , பாதுகாப்பு தேவை அல்லாத வேறு விடயங்களுக்கு அதனை பயன்படுத்தி வருமானம் ஈட்ட முயல்வது சட்டத்திற்கு முரணானது என தெரிவித்தார்.
Spread the love