2024ஆம் ஆண்டு தேர்தல் ஆண்டாக ஜனாதிபதி கூறியிருக்கின்றார். அனேகமாக அடுத்த வருடம் நவம்பர் மாதத்திற்கு முன்பாக ஜனாபதித் தேர்தல் நடைபெறும் என்றும் அதனைத் தொடர்ந்து நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் என்றும் அறிவித்துள்ளார். வருகிற 2024ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்டத்திலும் தேர்தலுக்கான நிதி ஒதுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக உள்ளுராட்சித் தேர்தல்கள் நடத்தப்படவில்லை. ஏற்கனவே வேட்பு மனுக்கள் கோரப்பட்டு கட்சிகளும் சுயேட்சைக் குழுக்களும் பலகோடி நிதியை வேட்புமனு தாக்கலுக்காக கட்டியுள்ளனர்.
கடந்த ஐந்து வருடங்களுக்கும் மேலாக மாகாணசபைத் தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. மாகாணசபைகளுக்கான எல்லை மீள்நிர்ணயங்கள் ஏற்றுக்கொள்ளப்படாததன் காரணமாக அது ஒத்திவைக்கப்பட்டதாகவும் மீள்நிர்ணயம் செய்த பின்பு தேர்தல்கள் நடைபெறும் என்றும் பேசப்பட்டாலும் எல்லைகளை மீளவும் திருத்திக்கொள்வதற்கான எத்தகைய நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரியவில்லை.
இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் பிரகாரம் இலங்கை தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்குத் தீர்வாக ஒற்றையாட்சி முறைக்குள் அதிகார பரவலாக்கத்தின் ஊடாக மாகாணசபை முறைமை ஒன்று உருவாக்கப்பட்டது.
சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை தடுத்து நிறுத்தி தமிழ் மக்கள் தமது இருப்பைப் பாதுகாத்துக்கொண்டு கௌரவமாக வாழ வேண்டுமென்ற அடிப்படையிலேயே இந்திய-இலங்கை ஒப்பந்தம் உருவாக்கப்பட்டதுடன், பதின்மூன்றாவது திருத்தச் சட்டமும் நிறைவேற்றப்பட்டது. ஆனால் இன்று மாகாணசபைக்கான தேர்தலை காலவரையறையின்றி ஒத்திவைத்து அதே சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை நிறுவுவதற்கான நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது.
சர்வதேச கடன்களை மீளச்செலுத்துவதற்கான காலங்கள் மாற்றியமைக்கப்பட்டுக் கொண்டிருக்கக்கூடிய சூழ்நிலையில் தேர்தல்களுக்கான நிதி இல்லை என்று கூற முடியாது. ஆகவே, ஏனைய தேர்தல்களுக்கு முன்பாக குறைந்தபட்சம் வடக்கு-கிழக்கு மாகாணசபைத் தேர்தல்களையாவது உடனடியாக நடத்த முன்வரவேண்டும் என்று தமிழ் மக்கள் சார்பாக அரசாங்கத்தைக் கோருகின்றோம் – என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.