1996 உலகக் கிண்ணத்தை வென்ற அணித்தலைவர் அர்ஜுன ரணதுங்க புதிதாக நியமிக்கப்பட்ட இலங்கை கிரிக்கெட் இடைக்காலக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
1973 ஆம் ஆண்டு 25 ஆம் இலக்க விளையாட்டு சட்டத்தின் ஊடாக விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவிற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ள ஏழு பேர் கொண்ட குறித்த இடைக்கால குழு இன்று முதல் செயற்படும்.
இதேவேளை ஷம்மி சில்வா தலைமையிலான இலங்கை கிரிக்கெட் வாரியம் தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதாக விளையாட்டுத்துறை அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் அர்ஜுன ரணதுங்கவுக்கு மேலதிகமாக, ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி எஸ்.ஐ.இமாம், ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ரோஹினி மாரசிங்க, ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஐராங்கனி பெரேரா, உபாலி தர்மதாச, ரகித ராஜபக்ஷ மற்றும் ஹிஷாம் ஜமால்டீன் ஆகியோர் இலங்கை கிரிக்கெட் சபையின் இடைக்கால குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்
இந்தநிலையில் கிரிக்கெட் விளையாட்டை மீட்பதற்கு தன்னால் இயன்ற அதிகபட்ச ஆதரவை வழங்குவதாக தெரிவித்துள்ளார். அர்ஜுன ரணதுங்க
கிரிக்கட் மீது தான் கவனம் செலுத்துவதாகவும், நிர்வாகம் குறித்து ஏனைய உறுப்பினர்கள் பார்த்துக் கொள்வார்கள் எனவும் தெரிவித்துள்ளதுடன் கிரிக்கெட்டுக்கு புதிய வர்த்தக முத்திரையை அறிமுகப்படுத்துவதே தனது நோக்கமாகும் எனவும் தெரிவித்துள்ளாா்.