419
யாழ்ப்பாணத்தில் இரு வீடுகளில் கொள்ளையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவரும் அவருக்கு உடந்தையாக செயற்பட்ட பெண் மற்றும் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை வாங்கிய நபர் ஆகிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களிடமிருந்து ஒரு தொகுதி நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் மற்றொரு தொகுதி நகை மன்னார் மற்றும் திருகோணமலை பகுதிகளில் வங்கியில் அடகு வைக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றை மீட்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் காவல்துறையினா் கூறினர்.
யாழ்ப்பாணம் கோப்பாய் காவல்துறைப்பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றில் கடந்த மார்ச் மாதம் 05ஆம் திகதி ஆட்களற்ற நேரம் வீட்டின் கதவை உடைத்து உட்புகுந்த கும்பல் ஒன்று வீட்டில் இருந்த ஐந்தே கால் பவுண் நகையை கொள்ளையடித்து இருந்தது.
அதேவேளை கடந்த ஏப்ரல் மாதம் 1ஆம் திகதி கோப்பாய் காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள பிறிதொரு வீட்டில் ஆட்களற்ற வேளை வீட்டின் கதவை உடைத்து உள்நுழைந்த கொள்ளை கும்பல் , 13 பவுண் நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.
குறித்த இரு கொள்ளை சம்பவம் தொடர்பில் உரிமையாளர்களால் கோப்பாய் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில், விசாரணைகளை முன்னெடுத்த காவல்துறையினா் திருநெல்வேலி பகுதியை சேர்ந்த 22 வயதுடைய இளைஞனை நேற்றையதினம் செவ்வாய்க் கிழமை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இளைஞனிடம் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் அவருக்கு உடந்தையாக இருந்த பெண்ணொருவரையும் , கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை வாங்கிய நபர் ஒருவருமான மூவரை காவல்துறையினா் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள மூவரையும் கோப்பாய் காவல்நிலையத்தில் தடுத்து வைத்து காவல்துறையினா் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்
Spread the love