574
சட்டத்தரணி சுவாஸ்திகா அருளிங்கம் மீளவும் அழைக்கப்பட்டு சட்டத்துறையிலே தனது உரையினை வழங்குவதற்குரிய சந்தர்ப்பத்தினை உருவாக்க யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், ஆசிரியர்கள், பல்கலைக்கழக நிர்வாகம் ஆகியன இணைந்து உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
சட்டத்தரணி சுவாஸ்திகா அருளிங்கம் அவர்களின் உரை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலே கடந்த 31ஆம் திகதி நிறுத்தப்பட்டமை தொடர்பிலான யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில்,
கடந்த அக்டோபர் 31ஆம் திகதி அன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சட்டத்துறையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சி ஒன்றிலே கலந்து கொண்டு சட்டத்தரணி சுவாஸ்திகா அருளிங்கம் அவர்கள் “நெருக்கடியான காலத்தில் நீதித்துறையின் சுதந்திரம்” என்ற தலையங்கத்திலே உரையாற்ற இருந்தார்.
இந்த உரையாடல் இறுதி நேரத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களில் ஒரு பிரிவினரின் நெருக்கதலின் காரணமாக கைவிடப்பட்டது. இதற்கு மாணவர்களினால் சொல்லப்பட்ட காரணம் சட்டத்தரணி சுவாஸ்திகா அருளிங்கம் தென்னிலங்கையில் ஒரு நிகழ்ச்சியிலே பேசும் போது தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினை பாசிஸ அமைப்பு என விபரித்தமையே ஆகும்.
ஒருவர் வெளியிட்ட தனிப்பட அரசியற் கருத்தின் அடிப்படையில் அவரைப் பல்கலைக்கழகத்திலே பேச அனுமதிக்கக் கூடாது எனப் பல்கலைக்கழக மாணவர்கள் நிர்வாகத்துக்கு நெருக்குவாரம் கொடுத்தமை மிகவும் தவறான ஒரு செயல் என்பதனை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் இந்த அறிக்கையில் பதிவிடுகிறது.
சட்டத்தரணி சுவாஸ்திகா அருளிங்கம் மீளவும் அழைக்கப்பட்டு சட்டத்துறையிலே தனது உரையினை வழங்குவதற்குரிய சந்தர்ப்பத்தினை உருவாக்க யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், ஆசிரியர்கள், பல்கலைக்கழக நிருவாகம் ஆகியன இணைந்து உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
பல்கலைக்கழகத்தினுள் கருத்துச் சுதந்திரம், கல்விச் சுதந்திரம், மாற்றுக் கருத்துக்களுக்கான இடம் என்பவற்றினைப் பாதுகாப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடுவது தொடர்பாக மாணவர்களுடனும், பல்கலைக்கழகத்தின் மாணவர் அமைப்புக்களுடனும் உரையாடுவதற்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் முடிவெடுத்துள்ளது. இது தொடர்பான செயற்பாடுகளில் நாம் விரைவில் ஈடுபடுவோம் என்றுள்ளது.
Spread the love