தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழையினால் வான் கதவுகள் திறக்கப்பட்டமை மற்றும் வெள்ளம் காரணமாக புத்தளம் மாவட்டத்தில் 11,586 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட செயலாளர் எச்.எம்.எஸ்.பி.ஹேரத் தெரிவித்தார்.
தெதுரு ஓயா, ராஜாங்கனை, இகினிமிட்டிய, அங்கமுவ, தப்போவ நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டதாலும், கடும் மழை காரணமாகவும் மாவட்டத்திலுள்ள கால்வாய்கள் உள்ளிட்ட நீர் நிலைகள் நிரம்பி வழிவதாலும் பல இடங்கள் வெள்ளத்தினால் மூழ்கியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன், பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகளின் தலையீட்டினால் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, புத்தளம் மாவட்டத்தில் வெள்ள அனர்த்த நிலைமை படிப்படியாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களில் நேற்று (09) காலை வரை 2389 குடும்பங்களைச் சேர்ந்த 8430 பேர் தொடர்ச்சியாக அவதிப்பட்டு வருவதாகவும், நாத்தாண்டிய, ஆராச்சிக்கட்டுவ, முந்தல், புத்தளம், மாதம்பை, வனாத்தவில்லு, மஹவெவ, தங்கொட்டுவ, கற்பிட்டி, வென்னப்புவ, பல்லம மற்றும் மஹகும்புக்கடவல ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட செயலாளர் எச்.எம்.எஸ்.பி.ஹேரத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தெதுரு ஓயா வான்கதவுகள் திறக்கப்பட்டதாலும், கடும் மழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினாலும் சிலாபம், அரியகம, கக்கப்பள்ளிய, மானுவன்கம, திஸ்சோகம, தெதுரு ஓயா மற்றும் தித்தக்கடை ஆகிய பிரதேசங்களில் ஏற்பட்டுள்ள வெள்ள நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காக சிலாபம் முகத்துவாரம் வெட்டப்பட்டு தேங்கி நிற்கும் வெள்ளநீரை கடலுக்குள் அனுப்பும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது.
மேலும், தல்வில மற்றும் மஹாவெவ வாவி வெட்டப்பட்டதன் காரணமாக மஹாவெவ வெள்ள நிலைமை கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.