508
மூதாட்டி ஒருவரை படுகொலை செய்த குற்றச்சாட்டில் இரு பெண்கள் உள்ளிட்ட மூவர் நெல்லியடி காவல்துறையினரினால், நேற்றைய தினம் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் – அல்வாய் பகுதியில் கடந்த ஒக்டோபர் மாதம் 5ஆம் திகதி வீடொன்றில் இருந்து மூதாட்டி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டு இருந்தார்.
அல்வாய் கிழக்கை சேர்ந்த பழனிப்பிள்ளை தில்லைராணி (வயது 84) எனும் மூதாட்டியே சடலமாக மீட்கப்பட்டு இருந்தார். அவரது உடற்கூற்று பரிசோதனையின் போது சந்தேகங்கள் இருந்தமையால் அவரது உடற்பாகங்கள் மேலதிக பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
கொழும்பில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் மூதாட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டது. அதனை அடுத்து விசாரணைகளை முன்னெடுத்த நெல்லியடி காவல்துறையினர் 32 மற்றும் 28 வயதுடைய தம்பதியினரையும் , மூதாட்டியின் வீட்டில் பணிப்பெண்ணாக இருந்த 19 வயது யுவதியையும் கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
மூதாட்டியின் காணிக்குள் இரண்டு வீடுகள் காணப்படுவதாகவும் , ஒரு வீட்டினை தம்பதியினருக்கு வாடகைக்கு வழங்கி விட்டு மற்றைய வீட்டில் மூதாட்டி வசித்து வந்ததுடன் , மூதாட்டியை பராமரிப்பதற்காக 19 வயது யுவதி ஒருவர் அந்த வீட்டில் பணிப்பெண்ணாக தங்கி இருந்தார் எனசும் காவல்துறையினா் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டுள்ள மூவரையும் காவல் நிலையத்தில் தடுத்து வைத்து காவல்துறையினா் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Spread the love