2006ஆம் ஆண்டு இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் பயணித்த வாகனத் தொடரணி மீது மேற்கொள்ளப்பட்ட குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த விடுதலைப் புலிகள் உறுப்பினர்கள் மூவரையும் அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுதலை செய்ய கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீண்ட விசாரணைக்குப் பின்னர் இந்தத் தீர்ப்பை வழங்கிய கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மகேன் வீரமன் பிரதிவாதிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை என்பதனால் பிரதிவாதிகள் விடுவிக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த மூன்று பிரதிவாதிகளும் ஏறக்குறைய 15 வருடங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்ததாக சட்டத்தரணிகள் குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த 2006 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 14 ஆம் திகதி கொழும்பு கொள்ளுப்பிட்டி பகுதியில், அப்போது இலங்கையில் பணியாற்றிய பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் பசீர் அலி முகமட் பயணித்த வாகனத் தொடரணி மீது குண்டுவீசி, அவரை கொலை செய்ய சதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட, ஸ்டார் என அழைக்கப்படும் யோகராஜா நிரோஜன், கரன் என அழைக்கப்படும் சுப்ரமணியம் சுரேந்திர ராஜா, கிரி என அழைக்கப்படும் கனகரத்தினம் ஆதித்யன் ஆகிய விடுதலை புலிகள் உறுப்பினர்கள் மூவருக்கும் எதிராக 25 குற்றச்சாட்டுகளின் கீழ் சட்டமா அதிபர் வழக்குத் தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது