368
தமிழக கடற்தொழிலாளர் ஒருவருக்கு 2 வருட சிறைத்தண்டனை விதித்து ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் ஜே. கஜநிதிபாலன் உத்தரவிட்டுள்ளார். அதேவேளை 21 கடற்தொழிலாளர்களுக்கு 18 மாத சிறை தண்டனை விதித்து, அதனை ஐந்து வருட காலங்களுக்கு ஒத்திவைத்துள்ளார்.
யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டு இருந்த 22 கடற்தொழிலாளர்களுக்கு எதிரான வழக்கு இன்றைய தினம் புதன்கிழமை நீதிமன்றில் அழைக்கப்பட்ட போது , 22 கடற்தொழிலாளர்களும் மன்றில் முற்படுத்தப்பட்டனர்.
அதனை தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணைகளில் 22 கடற்தொழிலாளர்கள் மீதான 3 குற்றச்சாட்டுக்களுக்கு தலா 06 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு அதனை ஐந்து வருடங்களுக்கு ஒத்தி வைத்தார்.
அவர்களில் ஒரு கடற்தொழிலாளர் கடந்த 2022ஆம் ஆண்டு மார்ச் மாத பகுதியில் கைது செய்யப்பட்டு , நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட வேளை அவருக்கு எதிரான மூன்று குற்றச்சாட்டுக்களுக்கு எதிராக 18 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டு , அதனை ஐந்து வருடங்களுக்கு மன்று ஒத்திவைத்து இருந்தது.
இந்நிலையில் குறித்த கடற்தொழிலாளர் மீள கைது செய்யப்பட்டமையால் அவருக்கான மு ற்குற்றத்திற்கான 18 மாத சிறைத்தண்டனையுடன் தற்போது விதிக்கப்பட்ட 18 மாத சிறை தண்டனையையும் அனுபவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
அதனை அடுத்து அவரது சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணி தண்டனை காலத்தை ஏக காலத்தில் (அதாவது இரு தண்டனையையும் ஒரே கால பகுதியில் என்றால் 18 மாதம்) அனுபவிக்க மன்றில் விண்ணப்பம் செய்தார்.
இரு குற்றங்களும் வெவ்வேறு கால பகுதியில் நடைபெற்றமையால் ஏக காலத்தில் அனுபவிக்க மன்று அனுமதிக்காது என்றும், தற்போதைய மூன்று குற்றங்களுக்கான தலா 06 மாத தண்டனையை ஏக காலத்தில் (06 மாதத்தில்) அனுபவிக்க மன்று உத்தரவிட்டது.
அதனால் கடற்தொழிலாருக்கு முற்குற்றமான 18 மாத சிறை தண்டனையுடன், தற்போது புரிந்த குற்றத்திற்கான 06 மாத சிறை தண்டனையையும் சேர்த்து 24 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை என்பது சிறைத்தண்டனை ஒத்தவைக்கப்பட்ட கால பகுதிக்குள் மீள குற்றம் செய்யாது இருக்க வேண்டும். அந்த காலப்பகுதிக்குள் மீள குற்றம் புரிந்து குற்றவாளியாக மன்று கண்டால், ஏற்கனவே விதிக்கப்பட்ட சிறை தண்டனையுடன், தற்போதைய குற்றத்திற்கான தண்டனையையும் சேர்த்து அனுபவிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love