426
மரண தண்டனையை ஏதிர்நோக்கியுள்ள 2 பிள்ளைகளின் தாயான செ.சத்தியலீலாவை விடுதலை செய்வதற்குரிய பொதுமன்னிப்பை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுத்துதவுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் குரலற்றவர்களின் குரல் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
ஜனாதிபதிக்கான குறித்த கோரிக்கை கடிதத்தை வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை முற்பகல் குரலற்றவர்களின் குரல் அமைப்பினரலால் நேரில் கையளிக்கப்பட்டுள்ளது. ஆளுநரின் சார்பில் ஆளுநர் செயலக மக்கள் தொடர்பு அதிகாரி குறித்த கோரிக்கை கடிதத்தினை பொறுப்பேற்றுக்கொண்டார்.
குறித்த கோரிக்கை கடிதத்தின் பிரதிகள் வடக்கு கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மு.கோமகன் தெரிவித்தார். ஜனாதிபதிக்கு அனுப்பிய கோரிக்கை கடித்தில், குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
14ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்து விடுதலையான பின்பு, மரணதண்டணையை எதிர்நோக்கியுள்ள இரண்டு பிள்ளைகளின் தாயான தமிழ் அரசியல் கைதி தொடர்பானது.
மேற்படி, இல.6/3, கண்ணாதிட்டி வீதி, யாழ்ப்பாணம். என்ற முகவரியை வாழ்விடமாகக் கொண்ட இரண்டு பிள்ளைகளின் தாயான செ.சத்தியலீலா என்பவர் 14 ஆண்டு காலம் தமிழ் அரசியல் கைதியாக வெலிக்கடை சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கொழும்பு மேல்நீதிமன்றத்தினூடாக விடுவிக்கப்பட்டிருந்தார். எனினும் சட்டமாஅதிபர் திணைக்களத்தின் மேல்முறையீடு காரணமாக இப்பெண்மணி மீண்டும் மரணதண்டணையை எதிர்நோக்கியுள்ளார்.
அதாவது, 2004ம் ஆண்டு இடம் பெற்ற, அமைச்சர் டக்லஸ்தேவானந்தா மீதான குண்டுத்தாக்குதல் தொடர்பில் சந்தேகத்தின் பெயரில் முன்பள்ளி ஆசிரியையான குடும்பத் தலைவி செ.சத்தியலீலா என்பவர் அவசரகாலச் சட்டவிதியின் கீழ் கைது செய்யப்பட்டிருந்தார். இவர், சுமார் 14 ஆண்டுகள் இருந்தபடி நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு முகம் கொடுத்து கடந்த ஜனவரி 14, 2018 அன்று கொழும்பு மேல் நீதி மன்றினால் “15வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட இரண்டாண்டு கடூழிய சிறைத்தண்டணையுடன் சேர்த்து 25 ஆயிரம் ரூபா தண்டப்பணமும் செலுத்த வேண்டும்.” என்கின்ற நிபந்தனையின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.
இந்த நிலையில், மேல்நீதிமன்றம் வழங்கிய இவ்வழக்குத் தீர்ப்பில் திருப்தியுறாத சட்டமா அதிபர் அதனை ஆட்சேபித்து மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். அதற்கமைய மேல்முறையீட்டு நீதிமன்றம் செ.சத்தியலீலா என்பவருக்கு ஜனவரி 23, 2023 அன்று மரணதண்டணை தீர்ப்பளித்துள்ளது. நிரந்தர வருமானமின்மையால் வறுமையின் கோரப்பிடிக்குள் சிக்கித்தவிக்கும் சத்தியலீலாவால் தனக்கென ஒரு சட்டத்தரணியை அமர்த்துவதில் கூட மிகச்சிரமப்படுகிறார்.
இவ்வாறான நிலையில்தான் இவர், இறுதி முயற்சியாக இலங்கை உயர் நீதிமன்றத்தின் வாசலை ஏகியிருக்கிறார். கௌரவ ஜனாதிபதியாகிய தாங்கள், சமூகங்களுக்கிடையிலான நல்லெண்ண சமிக்கையாக தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை உட்பட இன்னபிற விடயங்களிலும் கரிசனைகொள்வதாக நம்பப்படுகிறது.
இதேநேரம், அரச இயந்திரங்களின் செயற்பாடுகளோமுற்றிலும் மாறாக இருப்பது கவலையளிக்கிறது. இவ்வழக்குடன் சம்பந்தபட்ட அமைச்சர் டக்லஸ்தேவானந்தா அவர்கள், சந்தேகநபரான “செ.சத்தியலீலாவை வழக்கிலிருந்து விடுவிப்பது தொடர்பில் தனக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை” என்று, திறந்த மேல் நீதிமன்றத்தில் வெளிப்படையாக தெரிவித்திருந்த நிலையிலும் கூட இப்பெண்மணி இன்று சாவுத்தண்டணைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்.
ஆகவே, “14 வருடங்களாகக் குடும்பம், பிள்ளைகள், பெற்றோர், உறவுகள் என அனைவரையும் பிரிந்து சிறைக்குள் சொல்லொனா துன்பங்களை அனுபவித்துவிட்டு விடுதலையாகி வெளியில் வந்த பின்பும் ஒரு மரணதண்டணை கைதியாக மீண்டும் சிறை செல்வதை என்னால் நினைத்துப் பார்க்க முடியாது. அதற்கு, உயிரை மாய்த்துக் கொள்வதே மேல்” என்ற நிலைப்பாட்டில் இருக்கும் இந்த பெண்மணிக்கு ஏதேனுமோர் அரசியல் தீர்மானத்தின் அடிப்படையில் பொது மன்னிப்பை பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுத்துதவுமாறு கௌரவ ஜனாதிபதி அவர்களை, ஒரு சுயாதீன மனிதநேய அமைப்பாக நாம் கேட்டு நின்கின்றோம் என்றுள்ளது.
Spread the love