பிரித்தானியாவின் பழமைவாத கட்சியான கென்சவேற்றிவ் கட்சியின் பின்னடைவுக்கு மத்தியில், பதிவாகியுள்ள குடியேற்றவாசிகளின் நிகர அதிகரிப்பிற்காக பிரதமர் சுனக் மன்னிப்பு கேட்க மறுத்துள்ளார்.
குறிப்பாக அதிகரித்துவரும் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு அவரது கட்சியின் அமைச்சர்கள் மற்றும் பின்வரிசை உறுப்பினர்களின் கடுமையான அழுத்தத்தை பிரதமர் மீது செலுத்தவதாக தெரிவிக்கப்பட்டள்ளது.
அரசாங்கத்தின் நடவடிக்கைகள் மீதான அழுத்தம் அதிகரித்து வரும் நிலையில், முக்கிய தேர்தல் வாக்குறுதியை மீறும் வகையிலான நிகர குடியேற்ற அதிகரிப்பிற்காக மன்னிப்பு கேட்க ரிஷி சுனக் மறுத்துள்ளார்..
பிரித்தானியாவில் வாழ வரும் மக்களின் எண்ணிக்கை 7லட்சத்து 45 ஆயிரமாக உயர்ந்ததை உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்கள் வெளிப்படுத்தியதை அடுத்து, இன்னும் நிலையான நிலைக்கு குறைய குடியேற்றம் வேண்டும் என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
குடிவரவு அமைச்சர், ரொபர்ட் ஜென்ரிக், முன்வைத்துள்ள ஐந்து அம்சத் திட்டத்தில், வெளிநாடுகளைச் சேர்ந்த சமூகப் பாதுகாப்புப் பணியாளர்கள் தம்முடன் சார்ந்திருப்பவர்களைக் கொண்டு வருவதைத் தடைசெய்வது, NHS மற்றும் சமூகப் பாதுகாப்புப் பணியாளர்களுக்கான மொத்த விசாக்களின் எண்ணிக்கையில் வரம்பை ஏற்படுத்துவது உள்ளிட்ட முன்மொழிவுகள் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கென்சர்வேட்டிவ் கட்சி தனது 2019 ஆண்டு அறிக்கையில் ஒட்டுமொத்த குடியேற்ற எண்ணிக்கையை குறைக்க உறுதிமொழி அளித்த போதிலும், பிரெக்ஸிட்டுக்கு முன் காணப்பட்ட அளவை விட இந்த எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
முன்னாள் உள்துறைச் செயலர் சுயெல்லா பிராவர்மேன் உட்பட கட்சியின் வலதுசாரி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர், அந்த உறுதிப்பாட்டை மதிக்குமாறு பிரதமர் சுனக்கிடம் வலியுறுத்தி உள்ளனர்.