கொட்டாஞ்சேனை மற்றும் கொழும்பு புறநகர் பகுதிகளில் இருந்து தமிழ் இளைஞர்கள் 11 பேர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கர்ணகொட மற்றும் 14 கடற்படை அதிகாரிகளுக்கு எதிரான வழக்கை அடுத்த வருடம் மார்ச் மாதம் 28 ஆம் திகதி அழைக்குமாறு உயர் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் இன்று (30) உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கின் பிரதிவாதியான முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கர்ணாகொட, தன்னை பிரதிவாதியாக பெயரிடுவதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு தீர்ப்பு வழங்கப்படும் வரை விசாரணையை ஒத்திவைக்குமாறு அவர் முன்வைத்த கோரிக்கையை மூவரடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு ஏற்றுக்கொண்டது.
மேல் நீதிமன்ற நீதியரசர்களான அமல் ரணராஜா (தலைவர்) நவரத்ன மாரசிங்க மற்றும் மஞ்சுள திலகரத்ன ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாமினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரனாகொட மற்றும் 14 கடற்படை அதிகாரிகளுக்கு எதிரான வழக்கை விசாரிப்பதற்காக பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் ஒன்றை நியமித்துள்ளார்.
சட்டமா அதிபர், ஜனாதிபதி சட்டத்தரணி தப்புல டி லிவேராவின் கோரிக்கையின் பிரகாரம் நீதித்துறை அமைப்புச் சட்டத்தின் 12 (2) மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 450 (4) பிரிவின் கீழ் இந்த வழக்கு பிரதம நீதியரசரால் தீர்மானிக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் உள்நாட்டிலும், சர்வதேச அளவிலும் பதற்றம் ஏற்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்காக உயர் நீதிமன்றத்தின் 3 நீதியரசர்களள் கொண்ட அமர்வு நியமிக்கப்பட்டுள்ளது.