315
யாழ்ப்பாணம் – தெல்லிப்பழை பகுதியில் வன்முறையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான நான்கு சந்தேகநபர்களையும் எதிர்வரும் 19ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது.
தெல்லிப்பழை காவல் நிலையத்திற்கு அண்மையில் கடந்த திங்கட்கிழமை வாள் வெட்டு சம்பவம் இடம்பெற்றது. அதில் இளைஞன் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
வன்முறை சம்பவத்தில் ஈடுபட்ட கும்பல் ஹயஸ் ரக வாகனத்தில் தப்பி சென்ற போது , மல்லாகம் பகுதியில் காவல்துறையினர் வாகனத்தை நோக்கி துப்பாக்கி சூடு நடாத்திய போதிலும் கும்பல் வாகனத்துடன் தப்பி சென்று இருந்தது.
அந்நிலையில் விசாரணைகளை முன்னெடுத்தகாவல்துறையினர் , நேற்றைய தினம் புதன்கிழமை , புதுக்குடியிருப்பு பகுதியில் பதுங்கியிருந்த மூன்று சந்தேகநபர்களை கைது செய்தனர். அத்துடன் அவள் பயணித்த வாகனத்தையும் மீட்டு இருந்தனர்
அதேவேளை மேலும் ஒரு சந்தேகநபர் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்ட நிலையில் , சம்பவம் தொடர்பில் கைதான நான்கு சந்தேகநபர்களும் , மல்லாகம் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு , நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அதேவேளை , மேலும் மூன்று சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் அவர்களை கைது செய்வதற்கான தீவிர நடவடிக்கைகளை காவல்துறையினர் மற்றும் காவல்துறை விசேட அதிரடி படையினர் ஈடுபட்டுள்ளனர் என காவல்துறையினர் தெரிவித்தனர்.
Spread the love