Home இலங்கை நிதி வேண்டாம் – நீதியே வேண்டும்! வடக்கு கிழக்கில் போராட்டத்திற்கு அழைப்பு!

நிதி வேண்டாம் – நீதியே வேண்டும்! வடக்கு கிழக்கில் போராட்டத்திற்கு அழைப்பு!

by admin

குறுகிய காலத்துக்குள் ராஜபக்சக்களுக்கு தீர்ப்பளித்த நீதித்துறை சாட்சியங்களோடு உள்ள தம்மை கண்டுகொள்ளவில்லை எனவும், நீதி பெற்று தருவதை வலியுறுத்தி 10ம் திகதி மனித உரிமை தினத்தன்று நடைபெறும் போராட்டத்துக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் அழைப்பு விடுத்துள்ளனர்.

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் சங்கத்தின் தலைவி யோகராசா கனகரஞ்சினி இன்று ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்து போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

13 வருடங்களிற்கு மேலாக காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளைத் தேடி வருவதுடன், நீதி கேட்டு போராடம் தொடர்கிறது. தமது போராட்டத்திற்கு ஆண்டுகள் பல கடந்தாலும் நீதி இன்றுவரை கிடைக்கவில்லை.

காணாமல் ஆக்கப்பட்ட குடும்பங்களிற்கென நிதிகள் ஒதுக்கப்படுவதாக அறியப்படுகிறது. தாம் நிதிக்காக போராடவில்லை. நீதிக்காகவே போராடுவதாகவும் தமக்கு நிதி தேவை இல்லை. நீதியே  தேவை எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், சில ஊடகங்களிலும், சமூகவலைத்தளங்களிலும் தம்மால் சொல்லப்படாத விடயங்களை வெளியிடுகின்றனர். நிதியை எதிர்பார்த்து நிற்பதுபோல் எழுதுகின்றனர். தாங்கள் என்றும் நிதிக்காக போராடவில்லை நீதியே தேவை.

இலங்கை அரசு நீதி தராது என்பதாலேயே சர்வதேசத்திடம் நீதி கேட்கப்படுகிறது. எதிர்வரும் 10ம் திகதி சர்வதேச மனித உரிமைகள் தினம். அன்று வடக்கு கிழக்கில் போராட்டங்கள் முன்னெடுக்கபடவுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்சக்களே காரணம் என இலங்கை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மிக குறுகிய 2 ஆண்டுகளிற்குள் நீதிமன்றம் விசாரித்து தீர்ப்பளித்துள்ளது.

ஆனால் தமிழ்மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டமைக்கும், கொடூர யுத்தத்தை முன்னெடுத்தார்கள் என்பதற்கும், காணாமல் ஆக்கச் செய்தார்கள் என்பதற்குமான பல சாட்சிகள் ஆதாரங்களுடன் உள்ள போதிலும்  நீதி வழங்க எந்த நீதிமன்றமும் முன்வரவில்லை.

இலங்கை அரசும், சர்வதேசமும் நீதியை வழங்க முன்வரவில்லை. இந்த நிலையிலேயே  எதிர்வரும் 10ம் திகதி சர்வதேச மனித உரிமைகள் தினத்தன்று மாபெரும் போராட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

இந்த போராட்டம் வடக்கு கிழக்கில் அனைத்து மாவட்டங்களிலும் இடம்பெறவுள்ளது. கிளிநொச்சியில் வைத்தியசாலைக்கு அருகில் உள்ள எமது அலுவலகத்திற்கு முன்பாகவும் இடம்பெறும். குறித்த போராட்டத்திற்கு வர்த்தகர்கள், சிவில் அமைப்புக்கள் என அனைவரும் ஒத்துழைத்து தம்முடைய போராட்டத்துக்கு வலு சேர்க்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

 

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More