509
யாழ் மாவட்டத்தில் நெற்பயிர்ச்செய்கையில் வெண்முதுகு தத்தி மற்றும் கபிலத் தத்தி நோய்த்தாக்கம் வேகமாக பரவிவருகின்ற நிலையில் அதனை கட்டுப்படுத்துதல் தொடர்பான விசேட கலந்துரையாடல் மாவட்ட செயலர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்களின் தலைமையில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை மாவட்ட செயலக கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது.
குறித்த கலந்துரையாடலில், யாழ்ப்பாண மாவட்டத்தில் பொருத்தமற்ற இரசாயன மருந்துகள் மற்றும் உரங்களின் பாவனை காணப்படுவதோடு, இயற்கை விவசாயத்தினை பின்பற்றுதல் மற்றும் தற்போதைய பொருளாதார பிரச்சினையினை மாற்றி சிறப்பாக கொண்டு செல்ல நவீன விவசாய முறைகளோடு கூடிய இயற்கை விவசாயத்தினையும் பின்பற்றி இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டன.
மேலும், இயற்கை விவசாயிகளுக்கு தேவையான வசதிகள், உபகரணங்களை வழங்குதல் மற்றும் மண் வளப்பாதுகாப்பு ,உரம் பாவனையை குறைத்து குப்பை கூழங்களை பயன்படுத்தல்,விவசாயிகள் விவசாய ஆராய்ச்சியாளர்கள் மற்றும் விவசாய போதனாசிரியர்கள் கருத்துக்களை உள்வாங்குதல், விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் விவசாய திணைக்களங்களோடு சிறந்த தொடர்பாடல்களை கொண்டிருத்தல் , சிபார்சு செய்யப்படாத மலிவான இரசாயனங்களின் பாவனை, காலாவதியான மருந்து பாவனை, சட்ட விரோதமான மருந்துகள் விற்பனை செய்தல், பயிர்ச் செய்கையின் போது பயிர்களுக்கு ஏற்படும் நோயினை கட்டுப்படுத்தும் வழிமுறைகள், பூச்சிநாசினியை விசிறும் போது கவனிக்க வேண்டிய விடயங்கள் உள்ளிட்டவை விரிவாக கலந்துரையாடப்பட்டன.
இக்கலந்துரையாடலில் மாவட்ட விவசாயப் பணிப்பாளர் மற்றும் துறைசார் திணைக்கள அதிகாரிகளும் கலந்துகொண்டிருந்தார்கள்.
Spread the love