Home இலங்கை வன்முறையற்ற வாழ்வுக்கான ஓவியர்களும் நினைவு கூறுதலும்!

வன்முறையற்ற வாழ்வுக்கான ஓவியர்களும் நினைவு கூறுதலும்!

பேராசிரியர்.சி.ஜெயசங்கர்

by admin

 

இலங்கைத் தலைநகர் கொழும்பில் ஒரே காலத்தில் இருவேறு ஓவியக் கூடங்களில் ஒரு மாத கால காண்பியக் காட்சிகள் இடம்பெறுகின்றன. வன்முறையற்ற வாழ்வுக்கான ஓவியர்கள் ஐவரது இருபத்தைந்து ஓவியங்கள் கொழும்பு 302 பார்க் வீதியில் அமைந்துள்ள குராடோ கலைக் கூடத்தில் இடம்பெறுகிறது. 07 டிசம்பர் 2023 முதல் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை ஒரு மாத காலத்திற்கு இடம்பெறும் காண்பியக் காட்சியில் கமலா வாசுகி, சுசிமன் நிர்மலவாசன், எம்.டி.பார்த்திமா றுக்ஷானா, வி.ஜதீஸ்குமார், கே.மதீஸ்குமார் ஆகியோரது ஓவிய ஆக்கங்கள் காட்சியில் உள்ளன.

நினைவு கூறுதல் ஐஐ எனும் தலைப்பிலான சுசிமன் நிர்மலவாசனின் ஓவியங்களின் காட்சி இலக்கம் – 02, அல்பிரட் ஹவுஸ் ரோட், கொழும்பு 03 அமைந்துள்ள பரடைஸ் றோட் காட்சிக் கூடத்தில் இடம்பெறுகின்றது. 07 டிசம்பர் 2023 முதல் 03 ஜனவரி 2023 வரை இக் காண்பியக் காட்சி இடம்பெற்று வருகின்றது.


சமகால ஈழத்தமிழ் ஓவியங்களின் பல்வேறுபட்ட பரிமாணங்களையும் இந்த ஓவியங்கள் காட்சிப்படுத்தி நிற்கின்றன. நவீன இலங்கையின் நவீன ஓவிய வரலாற்றில் எஸ்.ஆர்.கனகசபையுடன் ஆரம்பித்த ஈழத்தமிழர்களின் ஓவியப்பயணமானது கொழும்பு மையப்பட்ட காட்சிக் கூடங்களிலும், ஓவிய அமைப்புக்களுடனும் ஒன்றிணைந்து இயங்கி தமிழ்ப் பகுதிகளுக்கும் பரவலாக்கம் பெற்றிருந்தது.

ஓவியர் மாற்கு, ஓவியர் சிவப்பிரகாசம் அவர்களின் இணைப்பில் துளிர்விட்ட விடுமுறை கால ஓவியர் கழகம் நவீன மற்றும் மரபு ஓவியச் சிற்பக் கலையை புதிய தலைமுறையினருக்கு பயிற்றுவிப்பதில் முன்னோடியாக இருந்தது.


போரும், பொருளாதார தடைகளும் ஈழத்தமிழர்களது ஓவியப் போக்கில் புதிய தடத்தை ஏற்படுத்தியது. ஓவியக் காட்சிக்கூடங்கள் இல்லாத தமிழர் பகுதிகளில் சாதாரண மண்டபங்களே காட்சிக் கூடங்களாயின. பின்னாளில் பொது வெளிகளும், கிராமங்களும் ஓவியச் செயல்வாதத்தின் களங்களாயின.

பொருளாதாரத் தடை காரணமாக பல மூத்த நவீன ஓவியர்களது கைகள் கட்டுண்டு போயின. வரன்முறையான ஓவிய ஊடகங்களும் தைல மற்றும் நீர் வண்ணங்களும் வரத்தற்றுப் போனமை மேற்படி துயரநிலைமைக்கும் காரணமாகி இருக்கின்றது.


ஆயினும் ஓவியர் மாற்குவின் கலைவாண்மை நிலைமையைப் புரட்டி போட்டு உலகம் முழுதும் பரவும் தலைமுறை ஓவியர்களை பெருக்கிற்று. கையில் பட்டதெல்லாம் கலையாக்கும் வாண்மை கொண்ட ஓவியர் மாற்கு இப் புதிய தலைமுறைகளது நேரடியானதும், நேரடியற்றதுமான உத்வேகமானார்.
பள்ளிப் பிள்ளைகளது ஓவியப்பயிற்சி தாள்களில் பள்ளிப் பிள்ளைகள் பாவிக்கும் வண்ணக் கட்டிகளைப் பாவித்து ஓவியம் உருவாக்குவது அவருக்குப் பிரச்சினையாக இருக்கவில்லை. எதுவுமே இல்லாத போது கரிக்கட்டைகளால் ‘கார்ப்போட்’ மட்டைகளில் ஓவியங்களை வரைந்தார்.

ஈழத்தமிழர்கள் மத்தியில் நவீன ஓவியம் மீளவும் பலபரிமாணப்பட்டு வளரத்தொடங்கியது. மக்கள் கலையாக அது இயங்கத் தொடங்கியது. ஈழத்தில் நவீன ஓவியம் பொதுமக்கள் கலையாகவும் செயல்வாதமாகவும் வளர்ச்சிகண்டிருக்கிறது.


காட்சிக் கூடங்கள், அதற்கான நிபந்தனைகள் கடந்து இந்த ஓவிய இயக்கம் புலம்பெயர் தேசங்களுக்கும் பரந்தது. உயர் கல்வி நிறுவனங்கிளில் தங்களை வளம்படுத்திக் கொள்வதிலும் இப்புதிய தலைமுறையினர் ஆர்வம் கொண்டனர். சுயதேடல்களுக்கு ஊடாகவும் நிலைநிறுத்திக் கொள்ளும் கலைப்பயணங்களும் சமாந்தரமாக இடம்பெற்றன.

பிரபலமான ஓவியக்காட்சிக் கூடங்களைப் பார்க்கும் வாய்ப்புக்கள், ஓவியக் களப்பயிற்சிகளில் பங்குபெறும் வாய்ப்புக்கள், கலைச் செயல்வாதங்களில் பங்குபற்றும் வாய்ப்புக்கள், கலைச் செயல்வாதங்களில் பங்குபற்றும் அனுபவங்கள், ஓவிய முகாம் அனுபவங்கள் எனப் பலவகைப்பட்ட பின்புலங்களுடாகப் பரிணமிக்கும் சமகால ஈழத்தமிழரது காண்பிய உலகங்கள் மதிப்பிற்கு உரியதாகவும் மதிப்பீடு தேவைப்படுவதாகவும் இருக்கிறது.


ஈழத்தமிழரது காண்பியக் கலைப்பயணம், காண்பியக் காட்சிக் கூடங்கள் அவற்றின் நிபந்தனைகள் கடந்து யதார்த்தற்கு எதிர்வினையாற்றியதன் மூலமாக அது மக்கள் கலையாக நிலைநிறுத்தியும் கொண்டது.

அதன் காரணமாகவே பல தேசமட்ட, உலகமட்ட காண்பியல் காட்சிக்கூடங்களிற்கும், காண்பியல் விழாக்களிற்கும், மாநாடுகளிற்கும் அழைக்கப்படுவது சாத்தியமாகியிருக்கிறது. காண்பியக் கலைக் கூடங்கள் காலத்தை, யதார்த்தத்தை கருத்திற்கொண்டு சமகால உலக காண்பியல் கலைச்செயற்பாடுகளுக்கேற்ப தங்களை தகவமைத்துக் கொள்ள வேண்டிய நிலமை உருவாகியிருக்கிறது என்பதும் கவனிக்கத்தக்கது.

மாறாகப் புதியதை அறிமுகப்படுத்த வேண்டிய வணிகத் தேவையும் இதற்கு உண்டு என்ற கருத்தும் தட்டிக் கழித்துவிட முடியாது.

எனினும் ஈழத்து ஓவிய இயக்கம் பல்வேறு தளங்களிலும் இயங்கும் வல்லமை கொண்டதாக ஆகியிருக்கிறது என்பது வரவேற்கப்பட வேண்டியதும், கவனத்துடன் ஆற்றுப்படுத்த வேண்டியதுமாகும்.

பேராசிரியர்.சி.ஜெயசங்கர்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More