450
உயர் பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள மயிலிட்டி கலைமகள் மகா வித்தியாலய காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம் சாள்ஸ் தெரிவித்துள்ளார்.
விமானப் படையின் 73ஆவது வருட பூர்த்தியை முன்னிட்டு 73 பாடசாலைகளை புனரமைக்கும் வேலைத்திட்டம் யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் சனிக்கிழமை ஆரம்பமானது.
ஆரம்ப நிகழ்வுகள் மயிலிட்டி கலைமகள் மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற போது , நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட ஆளுனரிடம் , ” 205 ஆண்டு கால வரலாற்றை கொண்ட இந்த பாடசாலைக்கு சொந்தமான காணியின் சில பகுதிகள் இன்னமும் விடுவிக்கப்படாமல் , உயர் பாதுகாப்பு வலயத்தினுள் உள்ளது.பாடசாலைக்கு மைதான வசதிகள் கூட போதாத நிலையில் காணப்படுகிறது . எனவே காணியை விடுவித்து மைதான புனரமைக்குக்கும் உதவ வேண்டும்” என பாடசாலை அதிபர் கோரிக்கை விடுத்தார். அதற்கு ஆளுநர் தனது உரையில் பதிலளிக்கும் போது,
ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய வடக்கில் காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, மிக விரைவில் அதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும். அதன் போது , பாடசாலைக்கு சொந்தமான காணிகளும் விடுவிக்கப்படும்.
எதிர்வரும் ஆண்டுக்குள் இலங்கையில் அனைத்து காணி அற்றவர்களுக்கு காணிகளும், வீடுகளும் வழங்குவதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.
அதன் அடிப்படையில் பொதுமக்களின் அனைத்து காணிகளும் விடுவிக்கப்படும். அத்துடன் வனவிலங்கு மற்றும் வன ஜீவராசிகள் திணைக்களத்திற்கு சொந்தமான காணிகள் காணியற்ற மக்களுக்கு வழங்கப்படும் என தெரிவித்தார்.
அதேவேளை பாடசாலைக்கு தேவையான ஏனைய உட்கட்டமைப்பு பிரச்சினைகள் தொடர்பில் எழுத்து மூலம் கோரிக்கைகளை சமர்பிக்குமாறும், அது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆளுநர் தெரிவித்தார்.
Spread the love