யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடத்தின் இளங்கலை மாணவர் ஆய்வு மாநாடு நாளைய தினம் வியாழக்கிழமை நடைபெறவுள்ளது.
தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக நடைபெறும் இந்த மாநாட்டில் கலைப்பீடத்தின் சமூக விஞ்ஞானம் மற்றும் மனிதாயக் கற்கைகள் சார்ந்த 136 ஆய்வுக்கட்டுரைகள் பட்டப்படிப்பை நிறைவுசெய்து வெளியேறும் மாணவர்களால் சமர்ப்பிக்கப்படவுள்ளன.
“இலங்கையில் தொடரும் நெருக்கீடுகளிடையே தப்பிப்பிழைத்தலும் எதிர்ப்பும்” என்னும் கருப்பொருளில் நடைபெறும் இந்த ஆய்வு மாநாடு, மாணவர்கள் தமது இறுதிவருட ஆய்வுச் செயற்பாட்டின் பேறான ஆய்வேடுகளை அடிப்படையாகக் கொண்டு தயாரித்த ஆய்வுக்கட்டுரைகளை வெளிக்கொண்டுவரும் முயற்சியாக அமைந்துள்ளது.
மாநாட்டின் அழைப்பாளர் சிரேஷ்ட விரிவுரையாளர் கே.எல்.ரமணன் தலைமையில் கைலாசபதி கலையரங்கில் காலை 09 மணியளவில் நடைபெறவுள்ள மாநாட்டின் ஆரம்ப நிகழ்வின் பிரதம விருந்தினராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா கலந்துகொள்ளவுள்ளார்.
மாநாட்டின் தலைமையாளராக கலைப் பீடாதிபதி பேராசிரியர் சி. ரகுராம், மற்றும் சிறப்புரையாளராக இரேனியஸ் செல்வின்,ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.
ஆய்வுக்கட்டுரை அமர்வுகள் இரண்டு தொகுதிகளாக 17 விடயதானங்களின் ஊடாக நடைபெறவுள்ளது.