வயல் வேளாண்மையை வாழ்வியல் கொண்டாட்டமாக ஆக்கியிருப்பது தமிழரின் பண்பாடு. இந்தப் பண்பாடானது மனிதருக்கும் அனைத்து உயிர்களுக்கும், இயற்கைக்குமான எளிமையானதும் ஆழமானதுமான உறவையும் ஊடாட்டத்தையும் வெளிப்படுத்தி நிற்பது.
மனிதர்கள் இயற்கையின் பகுதி. அவர்கள் அதற்கும் அப்பாலானவர்களோ மேலானவர்களோ அல்லர் என்ற உண்மையை, யதார்த்தத்தை உணர்ந்தறிந்து கொண்டனர் தமிழர். அதன் வெளிப்பாடுகள் இயற்கையோடு இணைந்த வழிபாடுகளாகவும்; கொண்டாட்டங்களாகவும் உருவாக்கம் பெற்றிருக்கின்றன.
இவ்வாறு உணர்ந்தறியப்பட்டவை; தலைமுறை தலைமுறையாகக் கொண்டு செல்லப்படுவதன் வழிமுறைகளாக வழிபாடுகள், கொண்டாட்டங்கள் வடிவமைக்கப்பட்டு இருக்கின்றன. வாழ்விற்கு அடிப்படையான இயற்கையையும் அதன் உயிர்களையும், பயிர்களையும் மதித்து மாண்பு செய்வதும் இச்சடங்குகளின் பண்பாக இருப்பதை தெளிவாகக் காணமுடியும்.
இயற்கையின் அம்சமாகத் தம்மை உணர்ந்து கொள்ளும் அதேவேளை மனித வாழ்வுக்காக இயற்கையின் அம்சங்களான உயிர்களின், பயிர்களின் வழங்கல்களை வாழ்த்தும் தமிழர்தம் பண்பாடு கூர்மையான அறிதலுக்குரியது.
இந்தவகையில் தைப்பொங்கல் பெரும் கொண்டாட்டமாகும். இயற்கையின் முதன்மைச் சக்தியாக சூரியனை அடையாளங்கண்டு பொங்கிப் படைத்து நன்றிக் கொண்டாட்டம் நிகழ்த்துவது தமிழர் சமூகங்களின் ஆழ்ந்த அறிவின் பண்பாடாகக் காணமுடிகிறது.
அவ்வாறே பட்டிப்பொங்கலும், மனிதரின் வேளாண்மை வாழ்விற்கு பக்கபலமான மாட்டுப் பட்டிகளை மதித்து மனங்கொண்டு பொங்கி மகிழ்வது தமிழர் பண்பாட்டின் அறிவுப் பெருக்கின் பெறுமதியையே உணர்த்துகிறது.
அண்மைக் காலங்களில் பட்டிப்பொங்கலானது கோமாதா பூசையாக திரிபுபடுத்தப்படுவது நிகழ்தப்பட்டுவருகிறது. வேளாண்மையில் பசுக்கள் மட்டும் பங்கெடுக்க வைப்பதில்லை. அதனால்தான் எம்முன்னோர் பட்டிப்பொங்கலென எல்லா வகையான மாடுகளையும் இணைத்ததான பதத்தினை பயன்படுத்தி இருக்கின்றனர்.
தமிழர்கள் தமது மரபுகள் திரிபுபடுத்தப்படுவதை விரும்பியேற்று முன்னெடுப்பவர்களாக இருந்து கொண்டு தமிழர்கள் என கூறிக்கொள்வதுதான் ஆச்சரியம் தருவது.
இதுபோலத்தான் மயிலத்தமடு மேய்ச்சல் நிலப்பிரச்சினையிலும் பட்டிகள் துன்புறுத்தப்படுவதும், கொல்லப்படுவதும் பசுவதையாகவும்; பசுவதைக்கு எதிரான போராட்டமாகவும் சில அறிக்கைகள் மூலம் திரிபுபடுத்துவதும் நிகழ்ந்து வருகிறது.
பட்டிகளை தாக்குபவர்கள் பசுக்களை மட்டும் இலக்கு வைக்கவில்லை. அவர்களது இலக்கு பட்டிகள்தான். சடங்குகள் என்பவை இத்தகைய நுண்ணரசியல்களாலும் திசைமாற்றம் செய்யப்படுவது புரிந்து கொள்ளப்படவேண்டியது.
இயற்கையோடு இணைந்த வாழ்வின் மகிழ்வை நினைவுறுத்திக் கொண்டிருக்கும் இக்கொண்டாட்டங்களின் நுண்மை அறிந்து திரிபுபடுத்தல்களுக்கு இடங்கொடுக்காதும்; ஆதிக்க நீக்கங்கள் பெற்றவையாகவும் முன்னெடுப்பது வேண்டப்படுகிறது.
இந்தவகையில் தான் புதிர் எடுத்தல் என்பதும் விளைச்சலை இலாப நட்டக் கணக்காக குறுக்கிப் பார்க்கும் நவீன அறிவுக் கண்களுக்கு விளைச்சலின் உயிர்ப்பான பண்பைப் புலப்படுத்தும் சடங்காக இன்றும் நிகழ்ந்து வருகின்றது.
தைமாதத்து வளர்பிறைக் காலத்தில் நல்லதொரு நாளில் நல்லதொரு வேளையில் குறிப்பாக தைப்பூச நாளில் புதிர் எடுத்தல் சடங்கு நிகழ்கிறது.
நெல்மணிகள் முற்றி அறுவடைக்கு தயாராகும் வயற்பரப்பில் தாக்கத்தி கொண்டு தெரிந்த நெற்கதிர் அரிந்தெடுப்பர். இதற்கென இழைக்கப்பட்ட அல்லது வைத்திருக்கும் மூடற்பெட்டியில் ஐம்பொன் உலோகங்களுடன் நெற்கதிர்களையும் வைத்து மேற்படி குடும்பத்துப் பெண்ணொருவர் தலையில் சுமந்து வருவர்.
கருவளத்தின் மூலமான பெண்ணானவள் விளைச்சலின் மூலமான நெல்மணி சுமக்கும் புதிர் சுமந்துவரும் தமிழர் பண்பாடு முற்போக்கானது. பெண்ணும் வயலும் நெல்மணியும் ஒரே சக்திகளாக, உருவாக்கச் சக்திகளாக மதிக்கப்படுகின்றனர்.
இவ்வாறு கொண்டுவரப்படும் புதிர்கள் குஞ்சமாகக் கட்டப்பட்டு வீட்டு வாசலிலும், வளவு வாசலிலும் வழிபாட்டுடன் தொங்கவிடப்படும்.
புதிர் அறுக்கும் பொழுதும், வீட்டில் பக்குவமாக வைக்கும் பொழுதும் வழிபாடுகள் நிகழும். அடுத்து வரும் வருட விதைப்பின் போது இவை கலந்து விதைக்கப்படும். பொங்கலின் போது அரிசியாகக் குற்றி கலந்து பொங்கப்படும்.
இக்காலங்களில் குடும்பத்தவர் இறந்த நினைவு நாளிலும் புதிரெடுத்து படைத்து வழிபடுவதும் காணப்படுகின்றது.
புதிர் எடுத்தல் சடங்கு பொது இயல்பையும், பொது நோக்கையும் கொண்டிருக்கும். எனினும் இடத்துக்கிடம் குடும்பத்துக் குடும்பம் இச்சடங்கில் வித்தியாசங்கள் காணப்படுகின்றன என்பதும் அறிந்து கொள்ளப்பட வேண்டியது.
புதிரெடுத்தலின் மூலமந்திரமாக இருப்பது நெல்மணிகளை பொன்மணிகளாக பேணி விதைத்து விளைவித்து வாழ்ந்து மகிழ்தல். அதன் சுழற்சியை பாதுகாத்து தங்களுக்கு உரித்தானதாகப் நெல்மணியைப் பேணுவதும் அதன் பொலிவில் தமது நல்வாழ்வை ஆக்குவதும்; நாலுபேருக்குப் பகிர்வதும்; வாழ்வுக்கு ஆதாரமாக அதனை ஆக்கிக்கொள்வதும் ஆகும்.
புதிரெடுத்தல் என்பது வெறுமனே சடங்கு மட்டுமல்ல மரபுரிமையாக பேணப்படுவதற்கான பண்பாட்டுப் பண்டமும் அல்ல. அது நவீனமயமாக்கம் என்னும் காலனியமயமாக்கம் அழித்தொழித்த எம்முன்னோர் முன்னெடுத்து வந்த இயற்கையுடன் இணைந்த வேளாண் நடைமுறையின் ஒரு அம்சமாகும்.
தலைமுறைகளை உருவாக்கும் கருவளங்கொண்ட பெண்ணினது தலையில் பெருமகிழ்வுடனும் வழிபாட்டுணர்வுடனும் சுமந்து வரப்படும் நெல்மணிகள் தலைமுறைகளை உருவாக்க முடியாதவையாக ஆக்கப்பட்டிருப்பது அறிவின் துயரம்.
மேற்படி விடயங்களை புரிந்து கொண்டு அவற்றுள் காணப்படும் ஏற்றத்தாழ்வுகளை கருத்திலெடுத்து, அவை அகற்றி, முற்போக்கான கூறுகளை உலகெங்கிலும் இருந்து உள்வாங்கி முன்னகர்த்தலுக்கான பண்பாட்டு நடைமுறையாக புதிரெடுத்தலும் கொண்டாட்டமாக அமைவது பொருத்தமுடையதாகும்.
எங்களின் அறிவில் எங்களின் திறனில்
தங்கிநிற்போம் நாங்கள்
எங்களின் நிலத்தில் எங்களின் உழைப்பில்
விளைவித்தே வாழ்வோம்
கட்டுப்படுத்தும் வாழ்க்கை முறைகளை
நீக்கி எழுந்திடுவோம்
சூழலில் இணைந்து வாழும் வழிகளை
மீளவும் ஆக்கிடுவோம்
பேராசிரியர் சி.ஜெயசங்கர்