871
தமிழ்கூறும் நல்லுலகிற்கான ஈழத்தமிழர்களின் பங்களிப்பு என்பது ஆச்சரியப்பட வைப்பது. நிறுவனங்களை நிகரொத்த தனிமனித ஆளுமைகளின் அசுர உழைப்பின் பெறுபேறுகளாக இவை இருக்கின்றன.
அதிகாரங்களை, திரிபுபடுத்தல்களை, காட்டிக் கொடுத்தல்களை எதிர்கொண்டு சாதிக்கப் பெற்றவையாகவும் சாதிக்கப்பட்டு வருபவையாகவும் இவை காணப்படுகின்றன என்பதும் கவனத்தில் எடுக்கப்படவேண்டியது.
ஈழத்தில் தமிழியல் மற்றும் தமிழ் அறிவியல் ஆராய்ச்சி நிறுவன மயப்பாட்டின் எழுச்சியும் வீழ்ச்சியும் பற்றிய கனத்த உரையாடலின் தேவை காலனிய நீக்கச் சிந்தனை அல்லது மீளுருவாக்கச் சிந்தனைப் பின்புலத்தின் அடிப்படையானதாகின்றது.
மேலும் தமிழ்ப் பல்கலைக் கழக உருவாக்கம் பற்றிய அறிவார்ந்த சமூகமயச் செயற்பாடுபற்றியும்; அதன் தொகுப்பு மீதான அறிவார்ந்த உரையாடலும் சமாந்தரமாக முன்னெடுக்கப்படுவது மிகவும் அவசியமாகும்.
இவைபற்றி அறியும்போதுதான் மேற்படி விடயங்கள் சார்ந்து முன்னெடுக்கப்பட்டிருக்கின்ற நடவடிக்கைகளின் தாற்பரியத்தை புரிந்துகொள்ள முடியும்.
தமிழ், தமிழ் அறிவியல், தமிழ் பல்கலைக்கழகம் என்ற நேர்கோட்டில் இன்றைய உலகில் அம்பலப்பட்டுவரும் ஆதிக்கங்கள், அதற்கெதிரான ஆதிக்க நீக்கங்கள் என்ற தளங்களில் சமத்துவமும் ஆதிக்க நீக்கமும் என்ற மேற்படி விடயங்களை அடிப்படையாகக் கொண்டு மேற்கூறிய முன்னெடுப்புக்கள் நிகழ்ந்து இருப்பதையும் காணமுடிகிறது. இத்தகைய கனதியான வகையில் அமைந்திருக்கும் கடந்தகாலம் இன்றும் தொடர்வதன் சாட்சியமே இச்சிறுநூல்.
நிறுவனங்களாய தனிமனிதர்களின் உழைப்பிலான வரலாறு சமூகமயப்படுவது காலத்தின் தேவையாகிறது.
அதற்கு மேற்படி தலையாய ஆளுமைகள் அவர்களது அறிவியல் முன்னெடுப்புக்கள், அதுசார்ந்த அமைப்பு முன்னெடுப்புக்கள், அதற்கான ஆதரவுத் தளங்கள், ஆர்வலத் தளங்களின் அறிதலும் புரிதலும் அத்தியாவசியமாகும்.
அதேவேளை எதிர்கொண்ட சவால்கள், தடைகளாக இருந்தவை, இருந்த அமைப்புக்கள், ஆட்கள் என்பவற்றில் நின்றியங்கிய அரசியல் என்பவற்றின் மதிப்பீடும் தவிர்க்கப்படமுடியாததாகும்.
பல்வேறு சாதனைகள், சாதனையாளர்களின் நூற்றாண்டு, இரு நூற்றாண்டுகளாக அமையும் இக்காலகட்டத்தில் தமிழ் – தமிழாய்வறிவியல், தமிழ் பல்கலைக் கழகம் என்ற பெரும் இயக்கங்களின் மீளெழுச்சிக்கான காலமாக இக்காலத்தை ஆக்குவது எம்மனைவரினதும் வாழ்வுரிமை.
– பேராசிரியர் சி. ஜெயசங்கர்
Spread the love