தமிழ் அரசியல் தரப்புக்களினால் தமிழ் மக்கள் மத்தியில் ஏற்படுத்தப்படும் சர்வதேச நீதிமன்றம் தொடர்பான எதிர்பார்ப்புக்கள் அர்த்தமற்றவை என்பது வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மக்கள் அர்த்தமற்ற மாயைகளை தொடர்ந்தும் நம்பிக் கொண்டிருக்காமல் தீர்வுகளை அடைவதற்கான நடைமுறைச் சாத்தியமான முயற்சிகளை வலுப்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.
காஸா மீது இஸ்ரேல் முன்னெடுத்து வருகின்ற தாக்குதல் தொடர்பாக தென்னாபிரிக்காவினால் சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கிற்கு தீர்ப்பு தொடர்பாக கருத்து தெரிவித்த போதே ஈ.பி.டி.பி. கட்சியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் மேற்கண்டாவாறு தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
‘கடந்த 14 வருடங்களுக்கு மேலாக சர்வதேச நீதிமன்றத்தின் ஊடாக தமிழ் மக்களுக்கு நீதி பெற்றுத் தரப்படும் என்ற கோஷங்களை சில தமிழ் தரப்புக்கள்; மக்கள் மத்தியில் விதைத்து வருகின்றன.
குறிப்பாக இறுதி யுத்தத்தின்போது இடம்பெற்ற உயிரிப்புக்களுக்கான நீதி மற்றும் காணாமல் போனோருக்கான பரிகாரம் போன்றவற்றை சர்வதேச நீதிமன்றத்தின் மூலமே பெற்றக்கொள்ள முடியும் எனவும் உள்நாட்டு பொறிமுறையில் நம்பிக்கை கொள்ள முடியாது எனவும் சொல்லுகின்ற தமிழ் அரசியல் தரப்புக்கள், தமிழ் மக்கள் மத்தியில் சர்வதேச நீதிமன்றம் தொடர்பான மாயையை ஏற்படுத்தி இருக்கின்றனர்.
தற்போது, இஸ்ரேல் விவகாரத்தில் தென்னாபிரிக்காவினால் சர்வதேச நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கிற்கு வழங்கப்பட்டுள்ள தீர்ப்பானது, சர்வதேச நீதிமன்றின் சிந்தனை மற்றும் பார்வை எத்தகையது என்பதை வெளிப்படுத்தியிருக்கின்றது.
ஆயிரக்கணக்கான மக்களை தினமும் அழித்துக் கொண்டிருக்கிற தாக்குதல்களை நிறுத்துமாறு உலகின் அதியுச்ச நீதிமன்றக் கட்டமைப்பான சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிடவில்லை. இனப்படுகொலை மற்றும் யுத்த குற்றம் தொடர்பான சர்வதேச நியமங்களை மதித்து நடக்குமாறு சொல்லியிருக்கிறது.
காஸாவில் குறுகிய பிரதேசத்தில் பல லட்சம் அப்பாவி மக்கள் செறிந்து வாழ்கிறார்கள் என்பதோ, தாக்குதல் தொடர்ந்தால் அப்பாவி மக்களின் அழிவுகள் தவிர்க்க முடியாதவை என்பதோ சர்வதேச நீதிமன்றிற்கு தெரியாத சமாச்சாரங்கள் இல்லை.
அப்படியிருந்தும் தாக்குதலை நிறுத்துமாறு தீர்ப்பில் சொல்லப்படவில்லை.
இவ்வாறான சம்பங்கள் ஊடாக, சர்வதேச கட்டமைப்புக்களின் மனோநிலையையும் அவற்றின் நிகழ்ச்சி நிரல்கள் எத்தகையவை என்பதையும் எமது மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.