நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளின் வீட்டில் இன்று காலை முதல் என்ஐஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சோதனையின் பின்னணி குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.
விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பணிகளை சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி மேற்கொண்டு வருகின்ற நிலையில் இன்று அதிகாலை முதல் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளின் வீடுகளில் என்ஐஏ எனும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.
தடை செய்யப்பட்ட அமைப்புகள், தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பில் இருப்போரை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கும் பணியை என்ஐஏ மேற்கொண்டு வரும் நிலையில் இந்த ரெய்டு என்பது பெரும் அதிர்ச்சியை நாம் தமிழர் கட்சிக்கு கொடுத்தது.
தமிழகத்தை பொறுத்தமட்டில் இன்று சென்னை, தென்காசி, திருநெல்வேலி, சிவகங்கை, மதுரை, கோவை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று காலை முதல் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். திருச்சி சண்முகா நகரில் உள்ள நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் சாட்டை துரைமுருகன் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
மேலும் சென்னை கொளத்தூரில் பாலாஜி, கோவையில் ஆலாந்துறை ஆர்ஜி நகர் நாம் தமிழர் கட்சியில் ஐடி விங்க் நிர்வாகி ரஞ்சித் குமார், கோவை காளப்பட்டி முருகன், தென்காசி மாவட்டம் சிவகிரி பகுதியை சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் மாநில கொள்கை பரப்புச் செயலாளர் இசை மதிவாணன் , சிவகங்கை மாவட்டம் இளையான்குடி விஷ்ணு பிரதாப் உள்ளிட்ட நிர்வாகிகளின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டுள்ளது.
மேலும் நாம் தமிழர் கட்சியின் மாணவர் அணி செயலாளர் இடும்பாவனம் கார்த்திக் விசாரணைக்கு முன்னிலையாகக் கோரி என்ஐஏ சார்பில் சம்மன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. வரும் 5ம் தேதி என்ஐஏ விசாரணைக்கு முன்னிலையாக வேண்டும் எனக்கூறி சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படி முக்கிய நிர்வாகிகள் மீது என்ஐஏ அதிகாரிகள் கண்வைத்துள்ளதால் நாம் தமிழர் கட்சி சிக்கலில் சிக்கலில் சிக்கி உள்ளது.
இந்நிலையில் நாம் தமிழர் நிர்வாகிகள் வீடுகளில் என்ஐஏ சோதனை மேற்கொள்வதன் பின்னணி குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதாவது நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளுக்கு இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் இருப்போரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். மேலும் புலிகள் அமைப்பை சேர்ந்தவர்களும் நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவாக இருப்பதாக சொல்லப்படுகிறது.
இத்தகைய சூழலில் தான் தடை செய்யப்பட்ட அமைப்பை சேர்ந்த லண்டன் பிரமுகர் ஒருவருடன் நாம் தமிழர் கட்சியினர் தொடர்ந்து தொடர்பில் இருந்து வந்துள்ளனர். இவர்கள் பிரத்யேக செயலி ஒன்றின் மூலம் லண்டன் பிரமுகருடன் தொடர்பில் இருந்தாக கூறப்படுகிறது. இந்த தகவலை தொடர்ந்து என்ஐஏ அதிகாரிகள் நாம் தமிழர் நிர்வாகிகளின் வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இந்த சோதனைக்கு முக்கிய காரணம் என்பது 2 ஆண்டுகளுக்கு முன்பு சேலம் மாவட்டம் ஓமலூரில் சிக்கிய 2 பேர் எனவும் கூறப்படுகிறது. அதாவது 2 ஆண்டுகளுக்கு முன்பு 2022ம் ஆண்டு சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே காவற்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது செவ்வாய்பேட்டையை சேர்ந்த சஞ்சய் பிரகாஷ், எருமாபாளையத்தை சேர்ந்த நவீன் சக்கரவர்த்தி ஆகியோர் கைது செய்பயப்ட்டனர். இவர்கள் யூடியூப் பார்த்து துப்பாக்கி தயாரித்ததாக கைது செய்யப்பட்டனர். மேலும் இவர்களுக்கு தீவிரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பதாக சந்தேகம் கிளம்பியது. இதையடுத்து என்ஐஏ அதிகாரிகள் 2 பேரின் வீடுகளில் சோதனை மேற்கொண்டனர். இவர்களிடம் நடத்திய விசாரணையின்போது தான் நாம் தமிழர் கட்சி குறித்த தகவலை என்ஐஏ அறிந்ததாகவும், அதனடிப்படையில் அவர்கள் இன்று நாம் தமிழர் நிர்வாகிகளின் வீடுகளில் சோதனை மேற்கொண்டது தெரியவந்தது.