தொல் தமிழர் மெய்யறிவு வாழ்க
அல்லது
திரிபுபடா மெய்யறிவு வளர்க
தமிழர்களின் நுண்ணறிவின் புலர்தல்
தைப்பொங்கல்
உயிர்களின் இருப்பின் மூலம்
சூரியன்
அஃதறிந்த கூரறிவின் புலர்தல்
தைப்பொங்கல்
பச்சையம் என்றறிந்து
அறிவிக்காது போயினும்
பசுமையின் உயிரிருப்பு
சூரியக்கதிர்களில்
என்றார்த்த மெய்யறிவின் புலர்தல்
தைப்பொங்கல்
உதிக்கின்ற
சூரியக் கதிர்த் துளிர்ப்பில்
நெகிழ்ந்தெழுந்து
பொங்கிப் பெருகி வழியும்
கிழக்குத் திசைவழியேகி
கண்கள் பனிக்கும்
நன்றிப் பெருங்களிப்பில்…
வாழ்க
சூரியனை முழுமுதலாய்க் கண்டறிந்த
தொல் தமிழர் மெய்யறிவு
தைப்பொங்கல் தமிழரின் பொங்கல்
சூரியப் பொங்கல்
வியர்வை மணித்துளிகளில் உதிக்கும்
கோடான கோடி சூரியரின் உழைப்பில்
உலகத்து உயிர் வளர்க்க
இயற்கையில் இயற்கையால்
இயற்கைக்காக
பொங்கியெழும் பசுமை விளைச்சல்
சூரிய உதிப்பில் மனித உழைப்பில்
விளைத்தெடுத்த வெள்ளாமை
வீடு வந்து சேர்வதுண்டு
அனைத்துயிரும் வாழ்வதுண்டு
தலைமுறைக்கும் வாழ்வு உண்டு
தமிழர் திருநாள் தைப்பொங்கல்
தொல் தமிழர் மெய்யறிவு வாழ்க
திரிபுபடா மெய்யறிவு வளர்க
சி.ஜெயசங்கர்