பிரித்தானிய மன்னர் 3ஆம் சார்ள்ஸுக்குப் புற்றுநோய் ஏற்பட்டுள்ளதாகவும், அதற்கான சிகிச்சைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், பக்கிங்காம் அரண்மனை இன்று மாலை அறிவித்திருக்கிறது.
மன்னர் சில தினங்களுக்கு முன்னர் புரோஸ்டேட் சுரப்பி வீக்கத்துக்காகச் (enlarged prostate) சிகிச்சை பெற்ற வேளையில் அவருக்குப் புற்றுநோய் ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டதாகவும் அரண்மனை குறிப்பிட்டுள்ளது. எனினும் அவருக்கு எவ்வகையான புற்றுநோய் ஏற்பட்டுள்ளது என்பது பற்றிய விவரம் எதுவும் வெளியாகவில்லை.
75 வயதுடைய மன்னர் பொதுக் கடமைகளை ஒத்திவைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார். எனினும் அரச கடமைகளை அவர் மேற்கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மன்னருக்குப் புரோஸ்டேட் சுரப்பியில் புற்று நோய் ஏற்படவில்லை என அரண்மனை விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுரப்பி வீக்கத்தை அடுத்துச் சிகிச்சைக்காக அவர் ஒரு வார காலம் லண்டன் தனியார் கிளினிக் மருத்துவமனையில் (London Clinic private hospital) தங்கிச் சிகிச்சை பெற்றிருந்தார். அந்தச் சிகிச்சைகளின் போதே “பிறிதொரு கவலைக்குரிய
புற்றுநோயின் ஆரம்பம் அடையாளம் கண்டறியப்பட்டது என அரண்மனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மன்னருக்குப் புற்றுநோய் பாதித்த செய்தி பிரித்தானிய மக்கள் அனைவரதும் கவனத்தை ஈர்த்துள்ளது. சர்வதேச செய்தி நிறுவனங்கள் அதனை விசேட செய்தியாக வெளியிட்டுவருகின்றன.
நாட்டு மக்கள் அனைவரும் மன்னர் விரைவாக நலம் பெற வேண்டி நிற்கின்றனர் என பிரதமர் ரிஷி சுனாக் தனது செய்தி ஒன்றில் தெரிவித்திருக்கிறார். அரசியல் தலைவர்கள் பலரும் மன்னர் குணமடைய வேண்டும் என கேட்டு செய்திகளை வெளியிட்டுள்ளனர்.
அமெரிக்காவில் தங்கியுள்ள இளவரசர் ஹரி தந்தையாரான மன்னருடன் தொலைபேசியில் பேசியபிறகு அவரைச் சந்திப்பதற்காக பிரித்தானியா திரும்புகிறார் என்று செய்திகள் தெரிவித்தன.
மன்னர் சார்ள்ஸ் சிகிச்சை பெற்ற அதே லண்டன் மருத்துவமனையிலேயே வேல்ஸ் இளவரசி கேற்றுக்கும் அடிவயிற்றில் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருந்தது. சிகிச்சையின் பின்னர் இளவரசி அரண்மனை திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.