எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்ட மீன்பிடி விசைப் படகின் ஓட்டுனருக்கு ஆறு மாத சிறைத் தண்டனை மற்றும் இரண்டாவது முறையாக கைது செய்யப்பட்ட மீனவருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்தமையை கண்டித்து ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் மீனவர்கள் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தும் விதமாக ராமேஸ்வரம் மீன் பிடித்து துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சுமார் 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (18) காலை கறுப்பு கொடியேற்றி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்ட மூன்று தமிழக மீனவர்களுக்கு சிறை தண்டனை விதித்து இலங்கை நீதிமன்ற தீர்ப்பளித்ததை கண்டித்து நீதிமன்ற தீர்ப்பை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தியும் ராமேஸ்வரம் மீனவர்கள் கச்சத்தீவு திருவிழாவை புறக் கணிப்பதுடன் நேற்று (17) முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக ஆலோசனை கூட்டத்தில் விசைப்படகு மீனவர்கள் முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றி உள்ளமை குறிப்பிடத்தக்கது.