Home இலங்கை ஆலைகள் செய்வோம் கல்விச் சாலைகள் செய்வோம்! நிலாந்தன்.

ஆலைகள் செய்வோம் கல்விச் சாலைகள் செய்வோம்! நிலாந்தன்.

by admin

 

பாடசாலைகளை,பல்கலைக்கழகங்களைக் கட்டுவது உன்னதமானது. புலம்பெயர்ந்துபோன எல்லாத் தமிழர்களும் தாயகத்துக்கு திரும்பி வருவதில்லை. தாயகத்துக்கு திரும்பிவரும் எல்லாருமே தாயகத்தில் முதலீடு செய்வதில்லை. தாயகத்தில் முதலீடு செய்பவர்களிலும் மிகச்சிலர்தான் கல்வித்துறையில் முதலீடு செய்கிறார்கள். ஆளில்லா ஊரில் ஆலயங்களைக் கட்டுவதை விடவும் கல்விச்சாலைகளை கட்டுவது மகத்தானது.அப்படி ஒரு முதலீடுதான் கந்தர்மடம் சந்தியில் அமைக்கப்பட்டிருக்கும் நோர்தேன் யுனி என்று அழைக்கப்படும் தனியார் பல்கலைக்கழகம்.

போட்டிக் கல்வி வியாபாரமாக மாறிய ஒரு கல்விச்சூழலில், ஒரு முதலாளி கல்வியில் முதலீட்டைச் செய்யும்பொழுது அங்கேயும் வியாபார இலக்குகள் இருக்கும்.ஆனால் தனது முதலீட்டை விளம்பரப்படுத்துவதற்காக சினிமாத் துறைப் பிரபல்யங்களை கொண்டு வரும்போதுதான் சர்ச்சை எழுகிறது.

கடந்த இரு நூற்றாண்டுகளிலும் கிறிஸ்தவ மிஷனரிகளும் இந்து மத மறுமலர்ச்சியாளர்களும் போட்டிக்குப் பள்ளிக்கூடம் கட்டிய ஒரு பிரதேசம்தான் யாழ்ப்பாணம்.நவீன யாழ்ப்பாணம் எனப்படுவது அவ்வாறு போட்டிக்குப் பள்ளிக்கூடம் கட்டிய ஒரு போக்கின் தேறிய விளைவு.

அமெரிக்காவில் தமது சுகபோகங்களைத் துறந்து யாழ்ப்பாணத்திற்கு வந்து பள்ளிக்கூடங்களைக் கட்டிய மிஷன் தொண்டர்கள்;ஊரூராக பிடியரிசி சேர்த்து இந்துக் கல்லூரிகளைக் கட்டிய இந்து மறுமலர்ச்சியாளர்கள் என்ற மகத்தான முன்னுதாரணங்கள் ஈழத் தமிழர்களுக்கு உண்டு.

இம்மாதம் ஆறாந் திகதி உடுவில் மகளிர் கல்லூரியில், அக்கல்லூரி ஸ்தாபிக்கப்பட்டு 200ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் கொண்டாட்டங்கள் தொடக்கின.

சரியாக 200 ஆண்டுகளுக்கு முன் திருமதி.ஹரியற் வின்சிலோ என்று அழைக்கப்படும் அமெரிக்கப் பெண்,தனது 28ஆவது வயதில் உடுவில் மகளிர் கல்லூரியைத் தொடங்கினார்.தென்னாசியாவில் விடுதி வசதியோடு கூடிய முதலாவது பெண்கள் பள்ளி அது.யாழ்ப்பாணத்தில் ஹரியற் அம்மையார் தங்கியிருந்த காலத்தில் அவருடைய ஐந்து பிள்ளைகள் தொற்று நோய்க்கு இரையானார்கள்.அமெரிக்காவுக்கு படிப்புக்காக அனுப்பப்பட்ட அவருடைய ஆண்பிள்ளை கடல் பயணத்தில் இறந்து போனார்.தொடர்ச்சியான தனிப்பட்ட இழப்புகளால் நொறுங்கிப்போன போன ஹரியற் தன்னுடைய 37ஆவது வயதில், இளவயதில் இறந்து போனார்.அவரோடு சேர்ந்து பணிபுரிய வந்த அவருடைய இரண்டு சகோதரிகள் அவருக்குப் பின் இறந்து போனார்கள்.தன் மூன்று சகோதரிகளோடு சேர்ந்து பணிபுரிவதற்கென்று அமெரிக்காவிலிருந்து வந்த மற்றொரு சகோதரி யாழ்ப்பாணத்தில் வந்து இறங்கிய பின்னர்தான் தன்னுடைய ஏனைய மூன்று சகோதரிகளும் உயிரோடு இல்லை என்பதை அறிந்து கொண்டார்.

யாழ்ப்பாணத்தின் கல்வியை கட்டியெழுப்புவதற்காக எங்கேயோ பிறந்து எங்கேயோ வளர்ந்த வெள்ளைக்காரர்கள் இங்கு வந்து சந்நியாசிகள்போல வாழ்ந்து,தொண்டு புரிந்திருக்கிறார்கள்.அவர்கள் மதம் மாற்றினார்கள் என்ற குற்றச்சாட்டை முன்வைத்து அவர்களுடைய செயற்பாடுகளுக்கு எதிராக இந்து மறுமலர்ச்சியாளர்களும் இந்து அறக்கட்டளைகளும் பள்ளிக்கூடங்களைக் கட்டியெழுப்பினார்கள்.

மிஷன் பள்ளிக்கூடங்களை எதிர்கொண்டு ஆறுமுக நாவலர் யாழ்ப்பாணத்தில் சுதேசிகளின் பள்ளிக்கூடங்களைக் கட்டினார்.அவ்வாறு பள்ளிக்கூடங்களைக் கட்டுவதற்கு அவர் பிடியரிசித் திட்டம் என்ற ஒரு சமூகப் பங்களிப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.கிராமங்கள் தோறும் பிடியரசி சேகரிக்கப்பட்டு,அந்த நிதியில் யாழ்.இந்துக் கல்லூரியும் உட்பட பல்வேறு சுதேச பள்ளிக்கூடங்களை இந்து மறுமலர்ச்சியாளர்களும் இந்து அறக்கட்டளைகளும் கட்டினர்.

உடுவில் மகளிர் கல்லூரியில் இருந்து சில கிலோமீட்டர் தூரத்தில் மருதனார் மடத்தில் ராமநாதனின் கல்லூரி கட்டப்பட்டது.அப்பள்ளிக்கூடத்தின் ஸ்தாபகர்களில் ஒருவராகிய திருமதி லீலா ராமநாதன் ஒரு ஒஸ்ரேலியப் பெண். அவருடைய சேவையை வியந்து போற்றுபவர்கள் அவருடைய வெண்ணிறப் பாதங்களில் அந்த ஊரின் செம்பாட்டுச் சாயம் நிரந்தரமாக ஒட்டிக் கொண்டிருக்கும் என்று கூறுவார்கள்.

இவ்வாறு எங்கேயோ பிறந்து எங்கேயோ வளர்ந்த வெள்ளைக்காரப் பெண்களும் ஆண்களும்,உள்ளூரில் சைவசமய மறுமலர்ச்சியாளர்களும் கல்விச்சாலைகளைக் கட்டியெழுப்பிய போது அவர்கள் அதை அதிகபட்சம் தொண்டாகவே செய்தார்கள்.கல்விப் பணி என்பது உன்னதமான ஒரு தொண்டாகக் கருதப்பட்டு,போற்றப்பட்ட காலகட்டம் அது.

இப்படிப்பட்ட கல்விச்சாலைகளைக் கட்டும் ஒரு பாரம்பரியத்தின் பின்னணியில் வைத்து நோர்தென் யுனியையைப் பார்க்க வேண்டும். அந்த பல்கலைக்கழகம் கட்டப்பட்டிருக்கும் கந்தர் மடம் சந்தியில் இருந்து அரசடிச் சந்தியை நோக்கி வரும் கந்தர் மடம் வீதியில்,முன்பு ஒரு சைவப் பிரகாசா வித்தியாசாலை இருந்தது.அங்கே மாணவர்களின் வரவு குறைந்தபடியால் அப்பள்ளிக்கூடம் மூடப்பட்டு;பின்னர் இடிக்கப்பட்டு அந்த இடத்தில் இப்பொழுது ஏதோ ஒரு அரச கட்டடம் கட்டப்பட்டிருக்கிறது.அச்சிறிய பள்ளிக்கூடத்துக்கு ஈழப்போரில் ஒரு முக்கியத்துவம் உண்டு.1981 ஆம் ஆண்டு மாவட்ட அபிவிருத்தி சபைத்தேர்தல் நடந்த பொழுது சைவப்பிரகாச வித்தியாசாலை ஒரு வாக்களிப்புச் சாவடியாக இருந்தது. மாவட்ட அபிவிருத்தி சபையை ஏற்றுக்கொள்ளாத விடுதலைப் புலிகள் இயக்கம் அந்த சாவடியில் காவலுக்கு நின்ற போலீசாரின் மீது தாக்குதல் நடத்தியதில் ஒருவர் கொல்லப்பட்டார்.இப்பொழுது மாணவர்கள் இல்லை என்பதால் அப்பள்ளிக்கூடம் மூடப்பட்டு விட்டது. அது அமைந்திருக்கும் வீதி பலாலி வீதியில் வந்து ஏறும் சந்தியில் நோர்தேன் யுனி கட்டப்பட்டிருக்கிறது.

கனடாவில் வசிக்கும் தமிழ் முதலீட்டாளர் அதைக் கட்டியிருக்கிறார். தனது தாயகத்தில் அவர் முதலீடு செய்ய விரும்புகிறார். குறிப்பாக அதனைக் கல்வித் துறையில் முதலீடு செய்ய விரும்புகிறார்.தமிழ் மக்களுக்கு தனியார் பல்கலைக்கழகங்கள் வேண்டும்.தமிழ்மக்கள் தங்களுக்கு வேண்டிய துறைகளை விருத்தி செய்வதற்கு அரசாங்கத்தில் தங்குகியிராத அதுபோன்ற பல்கலைக்கழகங்கள் வேண்டும்.அந்த அடிப்படையில் அந்த முதலீட்டை வரவேற்க வேண்டும்.

அந்த முதலீட்டாளரின் மனைவி இந்தியாவின் சினிமாப் பிரபல்யங்களில் ஒருவரான ரம்பா.அதனால் அப்பல்கலைக்கழகத்தை விளம்பரப்படுத்த முயன்ற முதலீட்டாளர் தன்னுடைய மனைவியின் துறைசார்ந்து சிந்தித்து விட்டார்.தன் மனைவியின் துறை சார்ந்த பிரபல்யங்களை கொண்டு வந்து பெருமெடுப்பில் ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சியை ஒழுங்குபடுத்துவதன்மூலம் தனது பல்கலைக்கழகத்திற்குப் பொருத்தமான விளம்பரம் கிடைக்கும் என்று அவர் கருதியிருக்கலாம்.

தமிழ் வெகுசனைப் பண்பாட்டில் சினிமாவின் தாக்கம் வலியது.பெருந்தமிழ் பரப்பில்,குறிப்பாக தமிழகத்தில்,அரசியல் எனப்படுவது ஏதோ ஒரு விகிதமளவுக்கு சினிமாவின் நீட்சியும் அகட்சியும்தான்.ஊடகமாகட்டும் பொழுதுபோக்கு ஆகட்டும்,எல்லாவற்றிலும் சினிமாவின் தாக்கம் உண்டு.கேபிள் தொலைக்காட்சி எனப்படுவது சுந்தர ராமசாமி கூறுவதுபோல வீட்டுக்கு வந்த திரைப்படம்தான்.அது வீட்டில் வரவேற்பறையில் எப்பொழுதும் இருப்பது.எனவே தமிழ்ப் பொது உளவியலின் மீது தமிழ்ச் சினிமாவின் செல்வாக்குப் பெரியது.

தென்னிந்திய வணிக சினிமாவானது மேலோட்டமானது தமிழ்ப் பொதுப் புத்தியைச் சுரண்டுவது அல்லது அவமதிப்பது.தமிழில் ஜனரஞ்சகமானவற்றுள் பெரும்பாலானவை மேலோட்டமானவை;ஆழமற்றவை;அறிவுக்கு விரோதமானவை. இந்த அடிப்படையில் பார்த்தால் அறிவைக் கட்டியெழுப்பும் ஓர் உயர்கல்வி நிறுவனத்துக்கு ஜனரஞ்சகமான விளம்பரஉத்தி ஒன்றைத் தெரிந்தெடுத்த விடயத்தில் அந்த முதலீட்டாளர் தவறிழைத்து விட்டார்.

நிகழ்வில் கூடிய கூட்டத்தைக் கட்டுப்படுத்த அவர் மேடையில் பேசுகிறார்.தமிழ் மக்களுக்கு நன்மை செய்வதற்காகத்தான் புலம்பெயர்ந்து போன நாட்டில் இருந்து வந்திருப்பதாக கூறுகிறார்.ஆனால் கூட்டம் அவருக்கு அடங்கவில்லை. அவருடைய மனைவி ரம்பா பேசுகிறார்.கூட்டம் அடங்கவில்லை.போலீஸ் அதிகாரி பேசுகிறார் கூட்டம் அடங்கவில்லை.அப்படி ஒரு கூட்டத்தை எதிர்பார்த்து அதற்கு வேண்டிய முன்னேற்பாடுகள் செய்யப்படாததன் விளைவு அது.புலம்பெயர்ந்த தமிழர்களின் நிதி அதிகாரத்துக்குள்ள வரையறைகளை உணர்த்திய ஒரு நிகழ்வும் அது.

ஆனால் அந்தக் குழப்பம் புலம்பெயர்ந்த தமிழர்களின் முதலீடுகளுக்கு விரோதமானது அல்ல.முதலீட்டை விளம்பரப்படுத்த எடுத்துக்கொண்ட வியாபார உத்தியின் விளைவு அது.மேலும்,ஹரிஹரனின் இசையை பார்வையாளர்கள் அவமதித்ததாகவும் எடுத்துக்கொள்ளத் தேவையில்லை. ஒரு தமிழ் முதலீட்டாளர் தமிழ் பொதுப்புத்தியை கையாள்வதில் கற்றுக்கொள்ள வேண்டிய விடயங்கள் உண்டு என்பதனை உணர்த்திய ஒரு குழப்பம் அது. தாயகத்தில் புலம்பெயர்ந்த தமிழர்களின் முதலீடுகள் தொடர்பாக முதலீட்டாளர்களும் தாயகத்தில் உள்ள அரசியல் சமூகமும் இணைந்து ஒன்றிணைந்த ஒரு வேலைத் திட்டத்துக்குப் போகவேண்டியிருப்பதை உணர்த்திய ஒரு நிகழ்வு அது.

தாயகத்துக்கு முதலீடுகள் அவசியம்.தாயகத்தில் தொழில் வாய்ப்புகள் இல்லை; அல்லது மகிழ்ச்சியான ஒரு வாழ்க்கை இல்லை;அல்லது முன்னேறுவது கடினம் என்று கருதும் ஒரு தொகுதி மக்கள் தாயகத்தைவிட்டு வெளியேறிக் கொண்டிருக்கும் ஒரு காலகட்டம் இது. “இந்த மண் எங்களின் சொந்த மண்”என்று பாடிய ஒரு மக்கள் கூட்டம்,அந்த மண்ணை விட்டு வெளியேறிக் கொண்டிருக்கிறது.எனவே தாயகத்தைத் தொழிற் கவர்ச்சி மிக்கதாக மாற்ற வேண்டும்.அதற்கு முதலீடுகள் அவசியம். ஆனால் அந்த முதலீடுகளை எந்த நோக்கு நிலையில் இருந்து முன்னெடுப்பது என்பதுதான் இங்குள்ள சவால்.

“நாங்கள் தானம் செய்கின்றோம் அல்லது தொண்டு செய்கிறோம்”என்ற நிதி அதிகார மனோநிலையில் இருந்து அல்ல,மாறாக,தமிழ்த் தேசத்தைக் கட்டியெழுப்புவது அதற்கு வேண்டிய துறைசார் நிறுவனங்களைக் கட்டியெழுப்புவது என்ற நோக்குநிலையில் இருந்து புலம்பெயர்ந்த தமிழ் முதலீட்டாளர்கள் தாயகத்தில் முதலீடுகளைச் செய்ய வேண்டும். அதாவது தேச நிர்மானத்தின் பங்காளிகள் என்ற அடிப்படையில் முதலீட்டாளர்கள் தாயகத்தை நோக்கி வரவேண்டும். புலம்பெயர்ந்த தமிழ் முதலாளிகளை எப்படி தேச நிர்மானத்தின் பங்காளிகளாக மாற்றுவது என்று தாயகத்தில் உள்ள அரசியல் சமூகம் சிந்திக்க வேண்டும்.

முதலாளிகள்,அவர்கள் தமிழர்களோ,சிங்களவர்களோ,வெள்ளைக்காரர்களோ யாராக இருந்தாலும்,முதலாளிகள்தான்.அவர்களிடம் லாப நோக்கம் இருக்கும்.முதலாளிகள் அப்படித்தான் சிந்திப்பார்கள்.ரணில் விக்கிரமசிங்க புலம்பெயர்ந்த தமிழர்களின் முதலீடுகளை கொழும்புமைய நோக்கு நிலையில் இருந்துதான் அணுகுவார்.அவர் அப்படித்தான் சிந்திப்பார். ஆனால்,முதலீடுகளை தேச நிர்மாணத்தின் ஒரு பகுதியாகத் திட்டமிட வேண்டியது தாயகத்தில் உள்ள அரசியல் சமூகத்தின் பொறுப்பு,கொழும்பின் நோக்கு நிலையில் இருந்தல்ல;அல்லது தனிய லாப நோக்கு நிலையில் இருந்தல்ல;தேசத்தைக் கடியெப்புவது என்ற நோக்கு நிலையிலிருந்து முதலீடு செய்யுமாறு,தமிழ் முதலீட்டாளர்களை ஊக்குவிக்கவேண்டும்.அவர்களைத் தேச நிர்மாணத்தின் பங்காளிகளாக்க வேண்டும்.பாரதி பாடியது போல “ஆலைகள் செய்வோம் கல்விச் சாலைகள் செய்வோம்”

 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More