காசாவில் மார்ச் 4-ம் திகதிக்குள் போர் நிறுத்தம் ஏற்படும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர், காசாவில் போர் நிறுத்தம் ஏற்படுவதில் நெருக்கமாக இருப்பதாக தனது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தன்னிடம் தெரிவித்தார். அடுத்த திங்கட்கிழமைக்குள் (மார்ச் 4-ம் திகதி) போர் நிறுத்தம் ஏற்படும் என்று நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினர் இடையேயான போரில் காசாவில் உள்ள மக்கள் பெரும் தவிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் குழந்தைகள், பெண்கள் உள்பட பலியானோர் எண்ணிக்கை 29 ஆயிரத்தைக் கடந்துள்ளது. ஹமாஸ் அமைப்பினர் பிடித்துச்சென்ற இஸ்ரேல் பிணைக்கைதிகளை மீட்க 7 நாள் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. அதன்பின் இஸ்ரேல் தீவிர தாக்குதல் நடத்திவருகிறது.
இந்த நிலையில், காசாவில் போர் நிறுத்தத்தைக் கொண்டுவர அமெரிக்கா, கட்டார், எகிப்து ஆகிய நாடுகள் முயற்சித்து வருகின்றன.
இதில் ஹமாசின் கோரிக்கைகளை ஏற்க இஸ்ரேல் மறுத்தது. இதனால் போர் நிறுத்தம் ஏற்படுவதில் இழுபறி நீடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.