நிகழ்நிலை காப்பு சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட விதம் சட்டத்திற்கு முரணானது என தீர்ப்பளிக்குமாறு கோரி நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரனால் சமர்ப்பிக்கப்பட்டிருந்த அடிப்படை உரிமை மனுவை விசாரணையின்றி நிராகரித்து உயர் நீதிமன்றம் இன்று (29) தீர்மானித்துள்ளது. பிரியந்த ஜயவர்தன, ஷிரான் குணரத்ன மற்றும் அச்சல வெங்கப்புலி ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழுவினால் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
குறித்த சட்டமூலம் தொடர்பில் உயர் நீதிமன்றம் முன்வைத்த திருத்தங்கள் அதில் உள்ளடக்கப்படாத காரணத்தினால் குறித்த சட்டமூலம், சட்டப்பூர்வமாக நிறைவேற்றப்படவில்லை என தீர்ப்பளிக்குமாறு கோரி எம்.ஏ.சுமந்திரன் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார்.