முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் அவா் பயன்படுத்திய, கொழும்பு பெஜட் வீதியில் அமைந்துள்ள இல்லத்தை, அவர் ஜனாதிபதி பதவியிலிருந்து விலகிய பின்னரும் பயன்படுத்த ஏதுவாக அமைச்சரவை மேற்கொண்ட தீர்மானத்தை வலுவற்றதாக்கி உயர் நீதிமன்றம் இன்று இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.
மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் மற்றும் அதன் நிறைவேற்று பணிப்பாளர் பாக்கியசோதி சரவணமுத்து தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த அமைச்சரவை தீர்மானமானது 2019 ஆம் ஆண்டு ஒக்டோபர் 15 ஆம் திகதி, பிரதிவாதியான மைத்திரிபால சிறிசேன அமைச்சரவையில் பங்கேற்றிருந்த போதே மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அது இயற்கை நியதிகளுக்கு எதிரான செயற்பாடு எனவும் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள ஆவணங்கள் மற்றும் சாட்சிகளுக்கமைய தௌிவுபடுத்தப்பட்டுள்ளதாக நீதிமன்று சுட்டிக்காட்டியுள்ளது.
இதற்கு முன்னர் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, மனு மீதான விசாரணைகள் நிறைவடையும் வரை அமைச்சரவை மேற்கொண்டுள்ள தீர்மானத்தை இடைநிறுத்தி நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவை பிறப்பித்திருந்தது.