Home இலங்கை வெடுக்குநாறிமலைவிவகாரம் சிறீலங்காவில் நல்லிணக்கக் கதையாடலின் பொய்மையைஅம்பலமாக்குகின்றது

வெடுக்குநாறிமலைவிவகாரம் சிறீலங்காவில் நல்லிணக்கக் கதையாடலின் பொய்மையைஅம்பலமாக்குகின்றது

by admin

14.03.2024

சிறீலங்காவின் தொல் பொருளியல் திணைக்களமானது இத்தீவில் ஆரிய வம்சத்தினராகிய சிங்கள பௌத்தர்களேஆதிக் குடிகள் என்பதாக நிறுவுவதை மட்டுமே  தனது (அனைவருக்கும் தெரிந்த) இரகசிய வேலைத்திட்டமாக (Projects வரித்துள்ளது.

இத்தீவிலிருந்து ஆங்கிலேயர் வெளியேறிய காலத்திலிருந்து இலங்கையில் காணப்படும் பௌத்த தொல் பொருளியற் சின்னங்கள் அனைத்தையும் சிங்கள-பௌத்த தொல் பொருள் சின்னங்களாக நிறுவுவது என்பது இத்திணைக்களத்தின் பிரதான பணியாக இருந்துவருகின்றது.

அதுமட்டுமல்லாது இத்தீவில் தமிழர்களின் தொன்மையை சிங்களவர்களின்  தொன்மைக்கும் முந்தியதாக நிறுவக் கூடிய எந்த ஒரு தொல் பொருள் சின்னத்தைக்; கண்டுபிடிக்கும் போதும் அதைக் கைவிடுவது, மறைப்பது, அழிய விடுவது அல்லது சிங்கள-பௌத்த தொல் பொருள் சின்னமாகத் திரிபுபடுத்துவது என்பனவும் சிறீலங்காவின் தொல் பொருளியல்  திணைக்களத்தின் பணிகளாக அமைந்துள்ளதென்பது தமிழர்கள் அனைவருக்கும் வரலாறு தந்தபடிப்பினை ஆகும்.

கடந்த 75 வருடங்களாக தொல் பொருளியல் திணைக்களத்தின் மூலமாக தமிழர் தாயகமான  வடக்குக் கிழக்கில் இவ்வாறான விஞ்ஞானபூர்வமற்ற, திரிக்கப்பட்ட தொல்பொருள் ஆய்வுமுடிவுகளை வெளியிடுவதன் மூலம் வடக்கு-கிழக்கு தமிழர்களின் தாயகம் என்ற கோட்பாட்டைச் சிதைத்து,சிங்கள-பௌத்தமயமாக்கல் மூலமாக சிங்கள-பௌத்தர்களின் பாரம்பரிய வாழிடமாக வடக்கு-கிழக்கைக் மாற்றியமைத்து, தமிழர் தாயகத்தை ஆக்கிரமிப்பதே சிங்கள-பௌத்தபேரினவாதத்தின் முதன்மை நோக்காக இருந்து வருகின்றது.

அரசின் அனுசரணையிலான விவசாயக் குடியேற்றத்திட்டங்கள் போலவே தமிழர் பகுதிகளில் இவ்வாறு பௌத்ததொல் பொருட் சின்னங்களைக் கண்டடைவது என்பதுவும்,தமிழர்களின் தாயகத்தைச் சிங்களக் குடியேற்றங்கள் மூலம் ஆக்கிரமிப்பதற்கான முதற்படியாக எப்போதும் இருந்து வருகின்றமையே இவ்வாறான நடவடிக்கைகள் தமிழ் மக்கள் மத்தியில் தமது இருப்புத் தொடர்பான அச்சத்தை ஏற்படுத்த காரணமாகின்றது.

இவ்வாறான பல நூற்றுக்கணக்கான வேலைத்திட்டங்களுள் (Projects) வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய விவகாரமும் ஒன்று.
நெடுங்காலமாகத் தமிழ்ச் சைவமக்களின் வழிபாட்டிடமாக இருந்து வந்த வெடுக்குநாறிமலையில் 2017களில் திடீரெனமுளைத்தபௌத்ததொல் பொருள் சின்னம் என்ற கோரிக்கை வெடுக்குநாறிமலையை தனியே பௌத்த சின்னமாக மட்டுமன்றி, கூட்டாக சிங்கள-பௌத்த சின்னமாக வரிப்பதை நோக்காகக் கொண்டது என்பது தொல் பொருளியல் திணைக்களத்தின்  பதிவுகளிலிருந்து அப்பட்டமாகத் தெரியவருகின்றது.

அன்றிலிருந்து நீதிமன்ற விவகாரமாக உள்ள இரு இனங்களுக்கிடையிலான  இந்தமுரண்பாடு தொடர்பாக தொல் பொருளியல் திணைக்களம் மட்டுமல்லாது இவ்வாறானமுரண்பாடுகள் அனைத்திலும் தமிழர்களுக்கெதிராக நியாயமற்ற சட்ட மற்றும் வன்முறை வழியிலான பலத்தைச் சிங்கள-பௌத்த பேரினவாதத்துக்கு ஆதரவாகப் பிரயோகித்து வருகின்ற சிறீலங்காவின் காவல்துறையும் இவ்விடயத்தில் எப்போதும் போல்; தொடர்ச்சியாக பக்கச்சார்பாகவே நடந்து வருகின்றது.

இதுவரை நடாத்தப்பட்ட நீதிமன்றவழக்குகளில்  தமிழ் மக்களின் பக்கமுள்ள நியாயத்தை எடுத்துக் காட்டுவதாகவே தீர்ப்புகள் வழங்கப்பட்டு வந்துள்ள நிலையிலும் விடாக்கண்டனாகத் தொல் பொருளியல் திணைக்களமும்,காவல் துறையும் எவ்வாறேனும் தமிழ் மக்களை வெடுக்குநாறி மலையிலிருந்து நிரந்தரமாக வெளியேற்றும் நோக்குடன் குதர்க்கமான,நியாயமற்ற நடவடிக்கைகளில் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றன.

கடந்த மார்ச் 08;ம் திகதி சைவர்களின் மிக முக்கியமான ஆன்மிக வழிபாட்டு நாளான மகாசிவராத்திரியின்போது வழிபாடுகளைத் தடை செய்ய காவல் துறையினர் பலதடவைகள் முயன்றபோதெல்லாம் ஒவ்வொரு தடவையும் நீதிமன்ற ஆணையை பார்வையிட்டுஅதனை ஏற்று வெளியேறியிருந்தனர்.

ஆனால் தொடர்நதும் பல்வேறு வகைகளில் மீண்டும் மீண்டும் ஆலய வழிபாடுகளுக்கும் மக்களுக்கும் இடையூறும்,அவமரியாதையும் செய்யும் வகையில் செயற்பட்டுள்ளார்கள். ஈற்றில் நீதிமன்றம் வழங்கயிருந்த அனுமதியையும் மீறி வழிபாட்டை முற்றாகத் தடுத்து நிறுத்தியதுடன்,சிறீலங்கா இராணுவத்தின் முள்ளிவாய்க்காற் படுகொலைக் காணொளிகளை நினைவூட்டும் வகையிற் கைது செய்யப்பட்டவர்களையும் நடாத்தியுள்ளார்கள்.

செய்தித்தாள்களுக்கு ஒன்றும், நீதிமன்றத்தின் வழக்கிற்கு இன்னொன்றுமாகக் குற்றச்சாட்டுகளை மாற்றிமாற்றிக் கூறி,எவ்வாறேனும் சிறைப்படுத்தியுள்ள பக்தர்களைக் கூடியகாலம் சிறையில் வைத்திருப்பதன் மூலம் சித்திரவதை செய்வது, அச்சமூட்டுவது என்ற நோக்கின் அடிப்படையில் அவர்களுக்கெதிராக வழக்குகளைக் காவற்துறை கையாண்டு வருகின்றது.

தொடரும் பேரினவாத நிகழ்ச்சிநிரலின் காரணமாக வரலாறு காணாத பொருளாதாரபேரழிவில்  இத்தீவு சிக்கித் தவிக்கும் நிலையிலும், சிங்களமனவுலகில்  ஆழ வேரோடியுள்ள சிங்கள-பௌத்த பேரினவாதம் இவ்வாறானஆக்கிரமிப்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்த வண்ணமே உள்ளது.

அரசியல் தலைவர்கள் மட்டுமல்லாது சிறீலங்காவின் நிர்வாக இயந்திரமும் சிங்கள-பௌத்தபேரினவாதமயப்பட்டுள்ளதையே இவ்வகையான நிகழ்வுகள் வெளிக்காட்டுகின்றன. நாவளவில் இன நல்லிணக்கம் பற்றிச் சம்பிரதாயமாகசிங்கள-பௌத்தஅரசியற் தலைவர்கள் பேசினாலும், அவர்களது செயற்பாடுகளும், இவ்வாறான நிகழ்வுகளின் போதான அவர்களின்  மௌனங்களும் இன வெறுப்பூட்டும் பேச்சுகளும் இன நல்லிணக்கத்திற்கு எதிரான திசையிலேயே அமைந்துள்ளன.

இது இத்தீவின் சகலதேசங்களுக்கும் நாசகரமான அழிவுகளை ஏற்படுத்தி வருகின்ற சிங்கள-பௌத்த பேரினவாதத்தை ஒருபோதும் கைவிடும் நோக்கம்,சிங்கள-பௌத்தமக்களிடமோ, அதிகாரவர்க்கத்தினரிடையோ, தலைவர்களிடமோ அல்லது பௌத்தமதத் தலைவர்களிடமோ இல்லை என்பதையே தெளிவாக வெளிக்காட்டி நிற்கின்றது.

இத்தீவின் புரையோடிப்போயுள்ள சிங்கள-பௌத்த பேரினவாதவெறியையும்  அதனால் ஏனைய தேசங்கள் குறிப்பாக தமிழ்த் தேசம் எதிர்கொள்ளும் கட்டமைப்புசார் இனவழிப்பையும் கருத்தில் கொள்ளாது, சிலநாடுகளும் சிலஅமைப்புகளும் நல்லிணக்கப் பொறிமுறைக்கு நிதியூட்டமும்  ஆலோசனைகளும் வழங்குவது மட்டுமன்றி அதுபற்றி இனவழிப்பை எதிர்கொள்ளும் எம்மிடமே வக்காலத்தும்  வாங்கிவருகின்றனர்.

இத் தீவில் நிகழ்ந்ததேசங்களுக்கிடையிலான ஆயுதமோதல்களின் முடிவை முரண்பாட்டின் முடிவாக end of armed struggle Vs end of conflict)) தாமும் கற்பனை செய்து,எ ம்மையும்  நம்பச்  சொல்லும் இந்த வெளியகச்சக்திகளின் முகத்தில் கறையைப் பூசுவதுபோல் சிங்கள-பௌத்தபேரினவாதம்  இவ்வாறான தமிழின விரோத செயற்பாடுகளைத் தொடர்ந்து செய்து வருகின்றது

இந்நிலையிலாவது  இச்சக்திகள் சிங்கள-பௌத்தபேரினவாதத்தின் உண்மைமுகத்தை உணரத் தலைப்படுமா என்பதுவே எங்கள் கேள்வியாகும்.

இவ்வாறானசிங்கள-பௌத்த பேரினவாத நிகழ்ச்சிநிரல்களையும், அதன்வழியிலான அருவருக்கத்தக்க, அழிவுகரமான ஆக்கிரமிப்புகளையும் மனிதஉரிமைமீறல்களையும்  கண்டித்துக் கண்டித்து தமிழ் மக்கள் களைத்துவிட்டார்கள்.  தமிழ் மக்கள் இவ்வாறான, தமது தேசிய அடையாளங்கள் மற்றும்  தேசிய இருப்பு மீதான அனைத்துவகை அழிப்பு நடவடிக்கைகளுக்கும் எதிராக மத,பிராந்திய வேறுபாடுகள் இன்றி, ஒற்றுமையாக அணிதிரள வேண்டியமையே  இன்றையகாலத்தின் தேவையாகும்.

தமிழ் மக்களின் தலைவர்கள் எனக் கூறிக்கொள்ளும்; தலைவர்களும் கட்சிகளும் தேர்தல் அரசியலுக்கும் அப்பால் கட்சிபேதமின்றி ஒரே கொள்கையுடன்  மக்கள் அணிதிரள்வதற்கு ஊக்கிகளாகவும் முன்னணிச் சக்திகளாகவும் செயற்படமுன் வரவேண்டும். அழிவின் விளிம்பில் உள்ள எமது தேசம் பிழைத்திருப்பதற்குரிய வாய்ப்புக்கு,எம்மத்தியில் ஏற்படும் விழிப்புணர்வும் இவ்வாறானஅணிதிரள்வும் மட்டுமேவழிவகுக்கும்.

வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் மீதான அடக்குமுறைகளுக்கு எதிராக நாளை (15.03.2024) வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள எதிர்ப்புப்  போராட்டத்திற்கு நாமும் எமது தோழமை கலந்த பங்களிப்பையும் ஆதரவையும் வழங்கி நிற்பதுடன் தமிழ் மக்களும் இப்போராட்டத்தில் கலந்து கொள்ளவேண்டும் எனவேண்டுகின்றோம். மேலும்  இவ்விடயம் தொடர்பாக சிறையில் வாடும் எம் உறவுகளுக்கும் எமதுஆதரவைத் தெரிவிக்கின்றோம்.

நன்றி.
(ஒப்பம்) அருட்பணிவீ. யோகேஸ்வரன்
இணைப் பேச்சாளர்
தமிழ் சிவில் சமூகஅமையம்

(ஒப்பம்) பொ. ந. சிங்கம்
இணைப் பேச்சாளர்
தமிழ் சிவில் சமூகஅமையம்

 

Spread the love
 
 
      
pCloud Premium

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More