ரணில் விக்கிரமசிங்க மஹிந்த ராஜபக்ஸ குடும்பத்தையே வாழ வைத்துள்ளார் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
வவுனியாவிற்கு பயணம் செய்த நிலையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், நாடு மிகவும் மோசமாக சீரழிந்த நிலையில் உள்ளது. மூன்று வேளை சாப்பிட்டவர்கள் இரண்டு வேளையும், இரண்டு வேளை சாப்பிட்டவர்கள் ஒரு வேளையும் சாப்பிடும் வங்குரோத்து நிலை ஏற்பட்டுள்ளது.
பாடசாலையில் இடம்பெறும் விசேட நிகழ்வுகளில் மாணவர்கள் மரணிக்கும் நிலை கூட ஏற்பட்டுள்ளது. வன்னி மாவட்டத்தில் வாழும் மக்கள் பிரதானமாக விவசாயத்தை மையமாக கொண்டு வாழ்கிறார்கள்.
நோயுற்ற நிலையில் வைத்தியசாலை செல்லும் போது அங்கு மருந்துகள் இல்லாத நிலை உள்ளது. இதனால் பலர் மரணிக்கும் நிலை உள்ளது. சுகாதார அமைச்சராக இருந்த ஒருவர் ஊழல் மோசடி செய்து சிறையில் உள்ளார்.
போசாக்கு இன்றி குழந்தைகள் மோசமான நிலையில் காணப்படுகின்றனர். இந்தநிலைக்கு தற்போதைய அரசாங்கமும் பதில் சொல்ல வேண்டும். ரணில் விக்கிரமசிங்கவும் ஏனையவர்களும் நாட்டின் குழந்தைகள் தொடர்பில் சிந்திக்காது தமது அரசியல் குறித்து சிந்திக்கிறார்கள். இந்த நிலை மாற வேண்டும்.
இன்னும் ஒரு சில மாதங்களில் தேர்தல்கள் வர இருக்கின்றது. மொட்டு சின்னமோ அல்லது ரணிலோ வந்தால் தற்போதைய நிலை தான் நீடிக்கும். ஐக்கிய மக்கள் சக்தியை பலப்படுத்த வேண்டும். கடந்த கடந்த காலத்தில் மக்கள் வீதிக்கு இறங்கி மகிந்த ராஜபக்ஸ, கோட்டபாய ராஜபக்ஸ ஆகியோரை வீட்டுக்கு அனுப்பினர். ரணில் விக்கிரமசிங்க மஹிந்த ராஜபக்ஸ குடும்பத்தையே வாழ வைத்துள்ளார் என தெரிவித்தார்.