வவுனியா, வெடுக்குநாறிமலை, ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில், கடந்த மகாசிவராத்திரி தினத்தன்று காவற்துறையினர் நடந்துக் கொண்டவிதம் மற்றும் ஆலய பூசகர் உள்ளிட்ட எண்மர் கைது செய்யப்பட்ட விவகாரத்திற்கு எதிர்ப்பினை வெளிப்படுத்தும் விதமாக வடக்கு- கிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஆளும் தரப்பு பிரதம கொரடா பிரசன்ன ரணதுங்க, வாராந்த மனுக்களை சபையில் சமர்ப்பித்துக் கொண்டிருக்கையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ். ஸ்ரீதரன், சார்ள்ஸ் நிர்மலநாதன், இரா. சாணக்கியன் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட வடக்கு- கிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பிரதிசபாநாயகர் அஜித் ராஜபக்ஷ போராட்டம் நடத்தியர்களை, அமைதியாக இருக்குமாறு அறிவித்தும், அவர்கள் தொடர்ச்சியாக பொலிஸ் அராஜகம் ஒழிக என்று கோஷம் எழுப்பி, சபையில் தங்களின் கண்டங்களைப் பதிவு செய்திருந்தனர்.
இதனால் சபையின் பணிகள் சில நிமிடங்கள் தடைபட்டதுடன், சம்பவம் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தப்படும் என நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ அறிவித்ததையடுத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் போராட்டத்தை கைவிட தீர்மானித்தனர்.