ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள பிளவு உச்சகட்டத்தை அடைந்துள்ளது. அக்கட்சிக்குள் கருத்து மோதல்களும் நாளுக்கு நாள் வலுப்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்சியின் இடைக்கால தலைவராக அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா செயல்படுவதுடன், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு நாளை 18ஆம் திகதிவரை தலைவராக செயல்பட நீதிமன்றத்தால் இடைக்கால தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் அரசியலமைப்பை மீறியமை, கட்சியின் யாப்பாபை சர்வாதிகரமாக செயல்படும் நோக்கில் மாற்றியமைத்தமை உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு மைத்திரிபாலவுக்கு எதிராக நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் பிரகாரமே அவர் தலைவராக செயல்பட இடைக்கால தடைவிதிக்கப்பட்டது.
முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோரின் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகளில் தாக்கம் செலுத்தும் வகையில் இந்த வழக்கின் தீர்ப்பு அமையும் என அக்கட்சியினர் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று புதன்கிழமை (17.04.24), முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவின் 108ஆவது ஜனன தினம் கொழும்பு பண்டாநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் மைத்திரி மற்றும் சந்திரிக்காவின் தரப்பினர் கலந்துகொண்டனர். இருதரப்பினரும் இருபுறங்களில் அமர்ந்திருந்தனர். நிகழ்வுக்கு முன்னதாகவே சென்றிருந்த நிமல் சிறிபாலடி சில்வா, மைத்திரிபால சிறிசேன மாநாட்டு பண்டபத்துக்குள் பிரவேசித்த போது, எழுந்து நின்று மரியாதை செலுத்தவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன.