மாலைத்தீவில் இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அந்நாட்டு ஜனாதிபதி முகமது மூயிஸின் கட்சி அமோக வெற்றி பெற்றது.
மாலைத்தீவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (21.04.24) நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் 93 நாடாளுமன்றத் தொகுதிகளில் மொத்தம் 368 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
வாக்கெடுப்பின் முடிவுகளில் 66 இடங்களை முகமது மூயிஸின் கட்சி வென்றுள்ளது. அதன் அடிப்படையில் மக்கள் தேசிய காங்கிரஸ் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்று தனது ஆதிக்கத்தை நிலைநாட்டியுள்ளது.
இந்நிலையில் மே மாதத்தில் புதிய சட்டசபை செயல்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சீன ஆதரவாளர் என கூறப்படும் தற்போதைய மாலைத்தீவு ஜனாதிபதியான முகமது மூயிஸ் இந்தியாவுடன் முரண்நிலையை கொண்டிருப்பவராக கருதப்படுகிறார்.
தான் ஆட்சிக்கு வந்தால் மாலைத்தீவில் இருந்து இந்திய இராணுவ வீரர்களை விரட்டுவதாக தேர்தல் பிரச்சாரங்களிலும் கூறியிருந்தார்.
இந்தியாவுடனான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், இந்த தேர்தல் அவரது செல்வாக்கை நிருப்பிப்பதற்கான தேர்தலாக பார்க்கப்பட்டது.
இந்நிலையில் மூயிஸின் இந்த வெற்றி சீன ஆதரவு செயற்பாடுகளை அதிகரிக்க மேலும் வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த தேர்தலுக்கு முன்னர் மக்கள் தேசிய காங்கிரஸ் கட்சி மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் 08 அமைச்சர்கள் மாத்திரமே இருந்தமையால் மாலைத்தீவு ஜனாதிபதிக்கு சட்டங்களை நிறைவேற்றுவதில் சிக்கல் ஏற்பட்டது.
தற்போது நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்குகள் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில் மாலைத்தீவு ஜனாதிபதிக்கு சட்டங்களை நிறைவேற்றுவது இலகுவாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.