மத்திய மாகாணத்தைச் சோ்ந்த எதிர்க்கட்சியின் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இரண்டு கோடி ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான இரண்டு மதுபான அனுமதிப்பத்திரங்களைப் பெற்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அந்த இரண்டு மதுபான அனுமதிப்பத்திரங்களையும் திகன பிரதேசத்தில் வர்த்தகர்கள் இருவருக்கு விற்பனை செய்ததாகக் கூறப்படுகின்றது.
அரசாங்கத்தில் இணைவதாக உறுதியளித்து இந்த இரண்டு மதுபான அனுமதிப்பத்திரங்களையும் அவர் பெற்றுள்ளார் என தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் தகவல் வெளியானதையடுத்து, திகன பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றின் விகாரதிபதி, மதுபான அனுமதிப்பத்திரம் பெற்ற வர்த்தகர்கள் இருவரையும் அழைத்து இது தொடர்பில் கேட்டதற்கு, மேற்படி இரு அனுமதிப்பத்திரங்களும் மேற்படி நாடாளுமன்ற அங்கத்தவரே வழங்கியதாக அவர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
பின்னர் இந்த சம்பவம் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் விகாரதிபதி முறைப்பாடு செய்தார்.
தேர்தலில் ஆதரவைப் பெறுவதற்காக, நாடாளுமன்ற உறுப்பினர் குழுவிற்கு, 200 மதுபான உரிமங்களை, அரசாங்கம் வழங்கியுள்ளதாக சமீபத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.
எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு கடந்த சில நாட்களாக பாராளுமன்றத்தில் இது குறித்து அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பினர். ஆட்சிக்கு வந்தவுடன் வழங்கப்பட்ட அனைத்து மதுபான உரிமங்களையும் ரத்து செய்வோம் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.