கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் பேராசிரியை நிர்மலாதேவிக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 2.42 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டிருக்கிறது. நிர்மலா தேவி மீது 5 பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டிருந்தது. ஐந்து வழக்குகளிலும் அவர் குற்றவாளி என விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா விரைவு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த வழக்கில் என்ன நடந்தது? அதன் முழு பின்னணி என்ன?
நீதிமன்றம் தீர்ப்பு
கடந்த 2018-ஆம் ஆண்டு, துணைப் பேராசிரியை நிர்மலா தேவி, உதவிப் பேராசிரியர் முருகன் ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகிய மூன்று பேர் மீது 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு வழக்கின் விசாரணையை சிபிசிஐடி காவல்துறையினர் நடத்தி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் விருதுநகர் மாவட்ட மகிளா விரைவு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
துணைப் பேராசிரியையாக இருந்த நிர்மலா தேவி, காமராஜர் பல்கலைக்கழக உதவி பேராசிரியர் முருகன், ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகியோர் நீதிபதி பகவதி அம்மாள் முன்பு ஆஜராகினர்.
இதில் நிர்மலா தேவி குற்றவாளி என நீதிபதி அறிவித்தார். உதவிப் பேராசிரியராக இருந்த முருகன், ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகிய இருவர் மீதான குற்றம் நிரூபிக்கப்படாததால் விடுதலை செய்வதாக நீதிபதி உத்தரவு வழங்கினார்.
என்ன சம்பவம்?
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் இருக்கும் தேவாங்கர் கல்லூரியில் அக்கல்லூரியில் கணிதத் துறையின் துணைப் பேராசிரியராக பணியாற்றி வந்தவர் நிர்மலா தேவி. இவர் கடந்த 2018-ஆம் ஆண்டு அக்கல்லூரியில் இளங்கலை பயின்ற 4 மாணவிகளிடம் தவறான வழிக்கு அழைப்பது போன்ற ஆடியோ வெளியாகி பரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக மாணவிகளின் பெற்றோர் புகார் தெரிவித்தபோது கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்பட்டது.
பேராசிரியையும் மாணவிகளும் பேசும் இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் பரவியதையடுத்து பல்வேறு அமைப்புகள் பேராசிரியைக்கு எதிராகவும் கல்லூரிக்கு எதிராகவும் போராடத் துவங்கினர். இதனையடுத்து கல்லூரி நிர்வாகம் துணைப் பேராசிரியை நிர்மலா தேவியை 15 நாட்களுக்கு பணியிடை நீக்கம் செய்தது.
6 மணி நேரம் போராடி பேராசிரியரை கைது செய்த காவல்துறை!
சமூக வலைதளங்களில் ஆடியோ வெளியானதைத் தொடர்ந்து பல்வேறு தரப்பினர் எதிப்பு தெரிவித்து பேராசிரியைக் கைது செய்ய வேண்டுமெனக் குரல் கொடுத்தனர்.
இதனையடுத்து கடந்த 2018-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16-ஆம் தேதி வீட்டில் இருந்த பேராசிரியை நிர்மலாதேவியை ஆறு மணி நேரப் போராட்டத்திற்கு பிறகு கைது செய்தனர். பின்னர் வழக்கு தமிழ்நாடு காவல்துறையிலிருந்து சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்கில் அப்போது இருந்த தமிழ்நாடு ஆளுநர் மாளிகைக்கும் தொடர்பு இருப்பதாக பேசப்பட்டது. அப்போதைய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இந்த வழக்கை விசாரிக்க ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்தானம் இந்த விவகாரத்தை விசாரிக்க நியமித்தார்.
சிபிசிஐடி டிஜிபி மாற்றத்தால் சர்ச்சை
அப்போது சிபிசிஐடி-யின் கூடுதல் டிஜிபி-யாக இருந்த ஜெயகாந்த் முரளி மாற்றப்பட்டு அமரேஷ் பூஜாரி நியமனம் செய்யப்பட்டார். இது உண்மையான விசாரணையை மறைக்க வழிவகுக்கும் என மு.க ஸ்டாலின், ராமதாசு உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்
இதனையடுத்து அப்போதைய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நியமித்த ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியான சந்தானம் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்கு நேரில் சென்று அப்போதைய துணைவேந்தர் செல்லத்துரையிடம் விசாரணை நடத்தினார்.
“நிர்மலா தேவியின் பின்னணி குறித்து அறிவதும், எந்தப் பின்னணியில் அவர் மாணவிகளை அணுகினார் என்பது தெரிந்து கொள்வதுமே தனது விசாரணையின் நோக்கம்,” என அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
பேராசிரியர், ஆய்வு மாணவர் கைது
இந்த விவகாரத்தில் சிபிசிஐடி காவல்துறை துணைப் பேராசிரியர் நிர்மலா தேவியைக் கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தினர். இதில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரிந்து வந்த முருகன் மற்றும் ஆராய்ச்சி மாணவரான கருப்பசாமி ஆகியோருக்கு இந்த வழக்கில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து கடந்த 2018-ஆம் ஆண்டு, ஏப்ரல் 24-ஆம் தேதி உதவி பேராசிரியர் முருகனை சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்தனர்.
ஆராய்ச்சி மாணவரான கருப்பசாமி மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
குரல் சோதனையில் உறுதியான நிர்மலாதேவி குரல்
பேராசிரியை நிர்மலாதேவி துவக்கத்தில் அந்த ஓடியோவில் பேசியது நான் இல்லை என மறுத்துவந்தார்.
இதனையடுத்து சிபிசிஐடி காவல்துறையினர் குரல் சோதனை நடத்தினர்.
இதில் அது நிர்மலாதேவியின் குரல் தான் என்பது உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து சிபிசிஐடி போலீசார் பேராசிரியை நிர்மலா தேவி, முருகன், கருப்பசாமி ஆகியோர் மீது இந்திய குற்றவியல் சட்டத்தின் பிரிவுகள் 370 (1), (3) 120 (B) 354 (A) உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் குற்றப்பத்திரிகையும் தாக்கல்செய்தனர்.
1,300 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல்
இந்த வழக்கை விசாரணை செய்த சிபிசிஐடி காவல்துறையினர் கடந்த 2018-ஆம் ஆண்டு ஜூலை 13-ஆம் தேதி 1,160 பக்கங்கள் கொண்ட முதல் கட்ட குற்ற பத்திரிகையை விருதுநகர் குற்றவியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
மேலும் இது தொடர்பான இரண்டாம் கட்டமாக 200 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை சிபிசிஐடி காவல்துறையினர் கடந்த செப்டம்பர் 7-ஆம் தேதி தாக்கல் செய்தனர். மொத்தமாக மூன்று பேருக்கும் எதிராக 1,360 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
கட்டுரை தகவல்
- எழுதியவர்,தங்கதுரை குமாரபாண்டியன்
- பதவி,பிபிசி தமிழ்
-