யாழ்ப்பாணம் – புங்குடுதீவு பகுதியில் மனித புதைகுழி அகழ்வுப் பணிகள் இன்றைய தினம் வியாழக்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் , சட்ட வைத்திய அதிகாரி உள்ளிட்ட துறைசார் அதிகாரிகள் முன்னிலையில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
புங்குடுதீவு 10 ஆம் வட்டாரத்தில் அரசினர் வைத்தியசாலையை அண்மித்த பகுதியிலுள்ள தென்பெருந்துறை சதானந்தசிவன் ஆலயத்தின் புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் வேளையில் , ஆலய சூழலில் கிடங்கொன்றினை வெட்டிய போது , மனித எலும்பு கூட்டு எச்சங்கள் அண்மையில் வெளிவந்தன.
அதனை தொடர்ந்தே கிடங்கு வெட்டும் பணிகளை இடைநிறுத்தி அது தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்கப்பட்டதை , அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் , அவ்விடத்தினை தமது கட்டுப்பாட்டுக்குள் எடுத்த நிலையில் அவ்விடத்தில் அகழ்வுப் பணிகளை முன்னெடுக்க , ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் அனுமதி கோரி விண்ணப்பம் செய்தனர்.
அதன் அடிப்படையில் இன்றையதினம் நீதிமன்றத்தின் அனுமதியுடன் அவ்விடத்தில் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்படுகிறது.