காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் தாக்குதலை நடத்தியதாகக் கூறப்படும் மூன்று இந்தியர்களை கனடா காவற்துறையினர் கைது செய்துள்ளனர்.
இதற்கிடையே ஹர்தீப் சிங் கொலை தொடர்பாகக் 22 வயதுடைய கரன் பிரார், 22 வயதுடைய கமல்ப்ரீத் சிங், 28 வயதுடைய கரன்ப்ரீத் சிங், ஆகிய மூன்று பேரை கனடா காவற்துறையினர் கைது செய்துள்ளனர். அவர்கள் மூன்று பேரும் ஆல்பர்ட்டா என்ற பகுதியில் வசிக்கும் non-permanent residents என்றும் விசாரணை அதிகாரி மன்தீப் முகர் தெரிவித்தார்.
அவர்கள் மீது கொலை மற்றும் சதித்திட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
45 வயது நிஜார் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சுட்டுக் கொல்லப்பட்டார். வன்கூவர் (Vancouver) புறநகர்ப் பகுதியில் சீக்கியக் கோயில் அருகே அவர் காரில் இருந்தபோது முகமூடி அணிந்த இருவர் அவரைச் சுட்டுக்கொன்றதாகக் கூறப்படுகிறது.
நிஜார் அந்தக் கோயிலின் தலைவராக இருந்தார். அவரைச் சுட்டவர்கள் இருவரும் காத்திருந்த காரில் தப்பிச் சென்றுவிட்டதாகச் சம்பவத்தில் நேரில் பார்த்தவர்கள் கூறினர்.
அந்தக் கொலைக்கும் இந்திய அரசாங்கத்துக்கும் தொடர்பு இருப்பதாகக் கனடியப் பிரதமர் ஜஸ்ட்டின் ட்ரூடோ (Justin Trudeau) குற்றஞ்சாட்டினார். அதைத் தொடர்ந்து இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையே பதற்றம் ஏற்பட்டது.
மூன்று பேர் அந்தக் கொலையின் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டதைத் தொடர்ந்து பேசிய கனடியக் காவற்துறை துணை ஆணையர் டேவிட் திபோல் (David Teboul), விசாரணை தொடர்வதாகச் சொன்னார்.
அந்த மூன்று பேர் தொடர்பாக மட்டுமின்றிக் கொலையில் இந்திய அரசாங்கத்துக்குத் தொடர்பிருக்கிறதா என்றும் தொடர்ந்து விசாரிக்கப்படுவதாக அவர் கூறினார்.
கொலையுண்ட நிஜார், இந்தியாவில் சீக்கியர்களுக்குக் காலிஸ்தான் தனிநாடு வேண்டும் என்று தொடர்ந்து பேசிவந்தமை குறிப்பிடத்தக்கது.