தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் உக்ரைன்-ரஷ்ய போருக்கு முக்கிய காரணம் அமெரிக்காவின் நேட்டோ படை எனும் நிலையில் அதற்கு மாற்றாக மற்றொரு அமைப்பை உருவாக்க ரஷ்யா-சீனா-ஈரான் ஆகிய மூன்று நாடுகளும் கை கோர்த்துள்ளன. சோவியத் காலத்தில் அதற்கு போட்டியாக நேட்டோ உருவாக்கப்பட்டது. எனினும் சோவியத் உடைந்து 30 ஆண்டுகளுக்கு மேலாகியும் கூட இன்னமும் நேட்டோ விரிவடைந்து கொண்டே செல்வதுதான் ரஷ்யா-உக்ரைன் போருக்கான ஆரம்பப் புள்ளியாக அமைந்து விட்டது
மேலும் உக்ரைன் நேட்டோவில் இணைந்துவிட்டால் அமெரிக்க படைகள் நேரடியாக ரஷ்ய எல்லையில் குவிக்கப்படும். இது பெரும் அச்சுறுத்தலாக அமையும் என்பதால் ரஷ்யா போரை அறிவித்தது. கடந்த 2022ம் ஆண்டு பெப்ரவரியில் இந்த போர் தொடங்கியது. 2 வாரங்கள்தான் போர் நீடிக்கும் என்று ரஷ்யா சொன்ன போதும் அமெரிக்கா கொடுத்த ஆயுத உதவியால் 2 ஆண்டுகள் கடந்து இப்போதுவரை உக்ரைன்-ரஷ்யா போர் நீடித்து வருகிறது.
இப்படியாக ஒட்டுமொத்த மேற்கு உலகமும் சீனா, ரஷ்யாவுக்கு எதிராக திருப்பி இருக்கும் நிலையில், தற்போது ரஷ்யா-சீனா-ஈரான் ஆகிய மூன்று நாடுகளும் நேட்டோ எனும் அமைப்பு மூலம் எப்படி அமெரிக்கா தனக்கு சாதகமான நாடுகளுடன் ராணுவ கூட்டணி வைத்திருக்கிறதோ, அதேபோல இந்த மூன்று நாடுகளும் புதிய ராணுவ கூட்டணியை உருவாக்க திட்டமிட்டிருக்கின்றன. இதனை பிரித்தானிய உளவுத்துறையான எம்ஐ15 உறுதி செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது