275
யாழ்ப்பாணம் மல்லாகம் பகுதியில் உரிய அனுமதிகள் இன்றி இயங்கி வந்த கொல்களம் நீதிமன்ற உத்தரவில் சீல் வைத்து மூடப்பட்டுள்ளது. அதன் உரிமையாளர் இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலையானதை அடுத்து ஒரு இலட்ச ரூபாய் சரீர பிணையில் செல்ல மன்று அனுமதித்தது.
மல்லாகம் பகுதியில் உரிய அனுமதிகள் இன்றி கொல்களம் ஒன்று இயங்கி வருவதாக சுகாதார பிரிவினருக்கு நேற்றைய தினம் திங்கட்கிழமை கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் , காவல்துறையினருடன் சம்பவ இடத்திற்கு சென்ற போது , அங்கிருந்து மாடு ஒன்றும் கன்று ஒன்றும் மீட்கப்பட்டது. அத்துடன் மாடுகளை வெட்ட பயன்படுத்தும் கூர்மையான ஆயுதங்கள் , மாடு கட்டும் கயிறுகள் உள்ளிட்டவற்றை மீட்டனர்.
மீட்கப்பட்டசான்று பொருட்களை மல்லாகம் நீதிமன்றில் பாரப்படுத்திய வேளை, மாட்டினையும் , கன்றினையும் தெல்லிப்பழையில் உள்ள அன்பு இல்லத்தில் வைத்து பராமரிக்க உத்தரவிட்ட மன்று , கொல்களத்தின் உரிமையாளரை இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை மன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவிட்டது.
அதன் அடிப்படையில் இன்றைய தினம் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போது , உரிமையாளர் மன்றில் முன்னிலையானார். விசாரணைகளை அடுத்து , அவரை ஒரு இலட்ச ரூபாய் சரீர பிணையில் செல்ல மன்று அனுமதித்தது.
அதேவேளை கொல்களத்தில் மாடுகள் கடத்தி வரப்பட்டு , இறைச்சியாக்கப்பட்டதா ? இறைச்சியாக்கப்பட்ட மாடுகள் திருடப்பட்ட மாடுகளா ? பசு மாடுகளும் இறைச்சியாக்கப்பட்டுள்ளதா ? போன்ற விடயங்கள் தொடர்பில் விரிவான விசாரணைகளை நடாத்தி மன்றில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது
Spread the love