284
சமூக வலைத்தளங்களில் யாழ் போதனா வைத்தியசாலை தொடர்பில் அவதூறு பரப்பிய நபருக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தொடரவுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
யாழ்.போதனா வைத்தியசாலை தாதியர் ஒருவர் நோயாளிகளிடம் மனிதாபிமானம் இல்லாதது நடந்து கொண்டதாக சில நாட்களுக்கு முன்பாக பேஸ்புக், ரிக்ரோக் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் நபர் ஒருவரின் காணொளி பகிரப்பட்டு வந்தது. காணொளியில், போதனா வைத்தியசாலை தொடர்பில் குற்றச்சாட்டுக்களை முன் வைத்த நபர் சுகாதார அமைச்சின் கீழ் உள்ள திணைக்களம் ஒன்றின் உத்தியோகஸ்தர் ஆவார். அவருக்கு எதிராக திணைக்கள ரீதியான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அதேவேளை அவருக்கு எதிராக போதனா வைத்தியசாலை நிர்வாகத்தால், யாழ்ப்பாண காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தோம். முறைப்பாட்டின் பிரகாரம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் குறித்த நபரை காவல் நிலையத்திற்கு அழைத்து காவல்துறையினர் வாக்கு மூலங்களை பெற்றுக்கொண்டனர். வாக்குமூலத்தின் அடிப்படையில் அவருக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தொடரப்படவுள்ளது.
அதேவேளை குறித்த காணொளி கடந்த 2023ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படு கிறது. ஒரு வருட காலம் கழித்து , காணொளியை சமூக வலைத்தளங்களில் பகிர வேண்டிய தேவை என்ன என்பது குறித்து தற்போதுகாவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து உள்ளதாகவும் தெரிவித்தார்.
Spread the love