குழந்தை ம.சண்முகலிங்கத்தின் சத்திய சோதனை நாடகம் 1985 ஆம் ஆண்டு யாழ் பரி.யோவான் கல்லூரியில் மேடையேற்றப்பட்டது. கல்லூரித் தமிழ் மன்றத்தின் வருடாந்தத் தமிழ் விழாவினையொட்டி இந்நாடகம் மேடையேற்றப்பட்டது. இந்நாடகத்தினை கல்லூரியின் இரசாயனவியல் ஆசிரியரும் நாடக நெறியாளருமான க.சிதம்பரநாதன் நெறியாள்கை செய்திருந்தார். க.சிதம்பரநாதனின் நெறியாள்கைக் கலை தனிச்சிறப்பு மிக்கது. தனித்து விரிவாகப் பார்க்கப்பட வேண்டியது.
சத்திய சோதனை நாடகம் எனது வாழ்வில் மிக முக்கியமானது. எனது ஆற்றலை, எனது விருப்பை அறிந்துணர்ந்து அதன்படி எனது கல்வி வாழ்கையை முன்னெடுப்பதற்கான உறுதிப்பாட்டைத் தந்தது.
விருப்பத்திற்குரிய கலைத்துறையில் உறுதியான காலடி வைப்பிற்கான அறிவார்ந்த சக்தியைத் தந்த நாடகமாக சத்திய சோதனை அமைந்திருந்தது.
கண்ணுக்கும் புலனாகாத வகையில் தடைச்சுவர்களாக அழுத்தி வைத்திருக்கும் கல்வி பற்றிய சமூகங்களின் கொடிய விழுமியங்களை எதிர்கொண்டு முன்னேறுவதற்கு உந்தும் அறிவுச் சக்தியாக சத்திய சோதனை அமைந்திருந்தது.
“சத்திய சோதனை” நாடகத்திற்கு முன்னமே க.சிதம்பரநாதனின் நெறியாள்கையில் மேடையேற்றப்பட்ட குழந்தை ம.சண்முகவிங்கத்தின் “நரகத்தில் இடர்படோம்” நாடகம் என்னுள் கனன்று கொண்டிருந்த கல்வி பற்றிய கேள்விகளின் நியாயத்தை உறுதிப்படுத்தும் வெளிக்குரலாக அமைந்திருந்தது.
நரகத்தில் இடர்படோம் நாடகம் தந்த நம்பிக்கையும், சத்திய சோதனை நாடகம் தந்த உறுதிப்பாடும் என்னை கல்லூரியின் விஞ்ஞானத்துறை மாணவனிலிருந்து நாடகத் துறை கலைஞராகவும், அறிஞராகவும், பேராசிரியராகவும் வளர்த்தெடுத்து வந்திருக்கின்றது. இது மிகப்பெரும் மகிழ்வுடன் சவால்களை எதிர்கொண்டு சாத்தியமாக்கலின் பயணம்.
உள்ளார்ந்த ஆற்றல்களை, விருப்புக்களை வெளிப்படுத்தக் களமாக அமைகின்ற வகையில் கல்வியும் கல்விக் கூடங்களும் அமைவது மெய்ப்பொருள் காண அழைக்கும்.
சத்திய சோதனை நாடகம் பற்றிய நினைவு மீட்டலில் தெறிந்த மற்றுமொரு ஆழ்ந்த விடயமும் குறிப்பிடப்பட வேண்டியது.
சிறப்புரையொன்றின் நீடிப்புக் காரணமாக நிகழ்ச்சி நிரல் எல்லை கடந்து போனமை நாடகம் காலந்தாழ்த்தித் தொடங்க வேண்டியேற்பட்டது.
கல்லூரி விடுகைக்கான மணியொலித்தது. பத்து நிமிடங்களுக்கு மேலாகியும் நாடகத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்கள் நாடகம் நிறைவு பெற்றும் நீண்ட நேரம் கரவொலி எழுப்பி மகிழ்ந்திருந்ததன் அர்த்தம் இப்பொழுது புரிகிறது. மாணவர்கள் எழுப்பிய அந்த நீண்ட நேரக் கரவொலி அவர்களது கல்வி பற்றிய மனவொலியன்றி வேறில்லை.
இன்று புறக்கிருத்திய செயற்பாடுகள் நீக்கம் பெற்ற கல்லூரிச் சூழலில் “நீங்கள் இப்பொழுது சடலங்கள்! பரீட்சையை இலக்காகக் கொண்டு கல்லூரியிலும் தனியாரிடமும் படிப்பது மட்டுந்தான் உங்களது வேலை!! வேறெதிலும் கவனம் செலுத்தக் கூடாது!!!” என்ற அறிவுறுத்தல்களுக்கு ஆட்பட்ட ஆசான்களின் கல்வி உலகில் மெய்ப்பொருளை அல்ல எப்பொருளைத் தான் காண்பது?
கழுத்து மட்டும் தான் தெரிகிறது! பரீட்சை மட்டுந்தான் தெரிகிறது!! அருச்சுனா அம்புவிடு!!! முடிந்தது கதை! முடிந்தது கல்வி!
மெய்ப்பொருள் காணக்கூடாத காணக் கிடைக்காத சடலங்களோ மாணவர்?!
அருச்சுனா கேள்!
கர்ணனைக் கொன்று விட்டேன், கர்ணனைக் கொன்று விட்டேன் என்று பச்சாதாபப்படாதே! அவனை ஏலவே பலர் கொன்றுவிட்டார்கள். அவனது உயிரற்ற உடலைத்தான் கொன்றாய் போ!
5ம் ஆண்டு புலமைப் பரீட்சை சாதாரண தரப் பொதுப் பரீட்சை, இவற்றினிடையே பல பலப் பரீட்சைகளினிடையே உயிரிழந்து சடலமாய்த் தேறிய உயர்தர மாணவரிடம் “நீங்கள் இப்பொழுது சடலங்கள்” என்பது அருச்சுனா அபயம்! அருச்சுனா அபயம்!
2024ல் சத்திய சோதனை நாடகத்தை சிறுநூலாகக் கொண்டுவரும் ஏறத்தாழ நாற்பதாவது வருடத்தில் எங்கேதான் நிற்கின்றோம் நாங்கள்?! என்னதான் நடந்திருக்கின்றது எங்களுக்கு?! 1985ல் சத்திய சோதனை நாடக ஆற்றுகை நிறைவில் பரி.யோவான் கல்லூரியில் எழுந்த கரவொலியின் பெருக்கும் ஆரவாரமும் என்னுள் மடிந்து போகாது நினைவுகளைக் காத்தருள்வாய் தாயே!
கரவொலியின் பெருக்கும் ஆரவாரமும் கிளர்ந்தெழும் வற்றாத ஊற்றாக அமைய வேண்டும். அது மகிழ்வுடன் கூடிய கற்றலையும் சவால்களை எதிர்கொண்டு வாழ்தலையும் சாத்தியமாக்கும் கல்விச்சூழலாக மாறவேண்டும்.
பேராசிரியர் சி. ஜெயசங்கர்
27.02.2024.