ராஜதந்திரி ஒருவர் சில ஆண்டுகளுக்கு முன்பு என்னிடம் கேட்டார் “உங்களுடைய கட்டுரைகளை உள்நாட்டில் வாசிப்பவர்களை விடவும் புலம்பெயர்ந்த தமிழர்கள்தான் அதிகமாக வாசிக்கிறார்களா” என்று.
தமிழ்ப் பொது வேட்பாளர் தொடர்பான வாதப்பிரதிவாதங்களைப் பார்க்கும் பொழுது உள்ளூரில் கட்டுரைகளை வாசிப்பவர்கள் குறைவு என்றுதான் கருத வேண்டியுள்ளது.வேட்பாளரை ஆதரிப்பவர்களும் எதிர்ப்பவர்களும் கூறும் கருத்துக்களைத் தொகுத்துப் பார்த்தால் அவர்களிற் பலர் அது தொடர்பாக இதுவரையிலும் வந்திருக்கக்கூடிய கட்டுரைகளை காணொளிகளை வாசிக்கவில்லையா? கேட்கவில்லையா? என்று யோசிக்கத் தோன்றுகிறது. ஈழத் தமிழர்கள் மத்தியில் ஒரு விடயத்தைக் குறித்த ஆழமான வாசிப்போ விளக்கமோ இன்றிக் கருத்து கூறுபவர்களின் தொகை அதிகரித்து வருகிறது. இந்த விடயத்தில் அரசியல் ஆர்வமுடைய வாக்காளர்கள் மட்டுமல்ல,பத்திரிகை ஆசிரியர்கள்,புலமையாளர்கள்,காணொளி ஊடகங்களில் கேள்வி கேட்பவர்கள்,யுடியூப்பார்கள்…என்று அனைவரும் அடங்குவர்.இவர்கள் பொது வேட்பாளர் என்ற ஒரு தெரிவை விளங்காமல் எழுதுகிறார்களா அல்லது எல்லாவற்றையும் நன்கு விளங்கிக்கொண்டும் ஏதோ ஒரூ சூதான அரசியல் உள்நோக்கத்தோடு,யாருக்கோ தங்களுடைய விசுவாசத்தை நிரூபிப்பதற்காக எழுதுகிறார்களா?
தமிழ்ப் பொது வேட்பாளர் விடயம் தமிழ் அரசியல்வாதிகளையும் ஊடகங்களையும் மிகத் தெளிவாக வகிடு பிரித்துக் காட்டுகிறது. அரசியல்வாதிகள்,ஊடகங்கள், யுடியுப்கள் போன்றவை யாருக்கு விசுவாசமாக இருக்கின்றன என்பதனை அது தெளிவாகக் காட்டுகின்றது.தமிழ்ப் பொது வேட்பாளரை எதிர்க்கின்ற பலரும் எங்கேயோ ஒரு விசுவாசப் புள்ளியில் சந்திக்கிறார்கள். அவர்கள் வெளித்தோற்றத்துக்கு ஆளுக்காள் தொடர்பற்ற உதிரிகளாகத் தோன்றலாம். ஆனால் அவர்களில் பலர் ஏதோ ஒரு தரப்புக்கு விசுவாசமானவர்கள் என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது.இதில் அரசியல்வாதிகள், ஊடகவியலாளர்கள், மருத்துவர்கள், பொறியியலாளர்கள் உள்ளிட்ட பலரும் அடங்குவர். பொது வேட்பாளரை எதிர்க்கும் பொழுது அவர்கள் காட்டும் வன்மம்,வெறுப்பு,பயன்படுத்தும் வார்த்தைகள் போன்றன அவர்கள் எந்தளவுக்கு தமிழ்ப் பொது வேட்பாளரைக் கண்டு பதட்டமடைகிறார்கள் என்பதைக் காட்டுகின்றது.
தமிழ்ப் பொது வேட்பாளரை முன்னுறுத்தி எழுதுபவர்கள் மிகத் தெளிவாக கூறுகிறார்கள்,ஜனாதிபதித் தேர்தலை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி தமிழ் மக்கள் மத்தியில் ஒரு மறைமுக வாக்கெடுப்பை நடத்துவது,அதில் தமிழ் மக்களை ஆகக்கூடிய பட்சம் ஒரு பொது நிலைப்பாட்டுக்குள் கொண்டு வருவது, அதாவது தமிழ்த் தேசிய ஐக்கியத்தை கட்டியெழுப்புவது; தமிழ் மக்களை ஒரு தேசமாகக் கட்டியெழுப்புவது.
கடந்த 15 ஆண்டுகளாக தமிழ் மக்கள் மத்தியில் வளர்ச்சியை விடவும் தேய்மானமே அதிகம்.பெரிய கூட்டுக்கள் உடைந்து சிறிய கூட்டுக்கள் தோன்றியுள்ளன.கட்சிகள் உடைந்து கொண்டே போகின்றன.மக்கள் அமைப்புகள் தோன்றிப் பின் சோர்ந்து விடுகின்றன.தமிழ் மக்களை வடக்கு கிழக்காய் சமயமாய் சாதியாய் இன்னபிறவாய் சிதறடிக்க விரும்பும் சக்திகள் தமிழ் மக்களாலேயே தெரிந்தெடுக்கப்படுகின்றன.
2009க்கு பின்னிருந்து தமிழ் கூட்டு மனோநிலை என்பது கொந்தளிப்பானதாக காணப்படுகிறது. யாரையும் நம்ப முடியாத சந்தேகப் பிராணிகளாக தமிழ் மக்கள் மாறிவருகிறார்கள்.எல்லாவற்றுக்கு பின்னாலும் சதிகளையும் சூழ்ச்சிகளையும் தேடும் ஒரு மக்கள் கூட்டமாக மாறி வருகிறார்கள். அதாவது தமிழ் மக்களைப் பிரித்துக்கையாளும் சக்திகளுக்கு உள்ளூர் முகவர்கள் அதிகரித்து வருவதாக ஒரு கூட்டுப் பயம்; ஒரு கூட்டுச் சந்தேகம்;ஒரு விதத்தில் ஒரு கூட்டு நோய் அதிகரித்து வருகிறது.
இது ஒரு கூட்டுத் தோல்வி மனப்பான்மையின் விளைவு.தோல்வி மனப் பான்மையிலிருந்து தமிழ் மக்களை விடுவிப்பது என்றால் ஒருவர் மற்றவரை நம்பும்; ஒருவர் மற்றவருக்குத் தோள்கொடுக்கும் கூட்டுப் பலத்தில் நம்பிக்கை வைக்கும் ஓர் அரசியலை முன்னெடுக்க வேண்டும்.அதற்கான கடந்த 15ஆண்டுகாலப் பரிசோதனைகளில் இருந்து கற்றுக்கொண்டு, சிவில் சமூகமும் அரசியல் சமூகமும் இணைந்த ஒரு பொதுக்கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்று சிந்திப்பது குற்றமா? தமிழ் மக்களை ஐக்கியப்படுத்துவது குற்றமா? தமிழ் மக்களை ஒரு தேசமாகத் திரட்டுவது குற்றமா? அப்படியென்றால் எமது பள்ளிக்கூடங்களில்,பாலர் வகுப்பில் “ஒற்றுமையே பலம்”; “ஒன்று திரண்டால் உண்டு வாழ்வு”;“அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு” என்று படித்ததெல்லாம் பொய்யா?
தமிழ்ப் பொது வேட்பாளரை ஆதரிக்கும் சிவில் சமூகங்கள் தமிழ் மக்களை ஐக்கியப்படுத்த வேண்டும் என்றுதானே கேட்கின்றன? தமிழ்மக்களை யாரிடமாவது சரணடையச் சொல்லி கேட்கின்றனவா? தமிழ்மக்களை யாருக்காவது விலை கூறி விற்க முற்படுகின்றனவா? இல்லையே? கடந்த 15 ஆண்டுகளாக வெற்றுக் காசோலைகளாக யாரோ ஒரு தென்னிலங்கை வேட்பாளருக்கு கொடுக்கப்பட்ட வாக்குகளை, தமிழ் மக்களின் பேரபலத்தை உயர்த்தும் வாக்குகளாக மாற்றுவது தவறா? ஜனாதிபதித் தேர்தலை முன்வைத்து உருவாக்கப்படும் பொதுக்கட்டமைப்பு எதிர்காலத்தில் தமிழ் அரசியலில் நிர்ணயகரமான ஒரு கட்டமைப்பாக கூர்ப்படைய வேண்டும் என்று கூடி உழைப்பது குற்றமா?
தமிழ்ப் பொது வேட்பாளர் தோற்றால் எல்லாமே தோற்றுவிடும், அது தமிழ் மக்களைப் புதை குழிக்குள் தள்ளிவிடும்…என்றெல்லாம் எழுதுகிறார்கள். அப்படியென்றால் தமிழ் மக்கள் இப்பொழுது மட்டும் என்ன வெற்றிப் பாதையிலா சென்று கொண்டிருக்கிறார்கள் ? இல்லையே? கடந்த 15 ஆண்டுகளாக தமிழ் மக்கள் மிகப்பெரிய திருப்பகரமான வெற்றி எதையுமே பெற்றிருக்கவில்லை. இந்த லட்சணத்தில் தமிழ் மக்கள் இனிமேல்தான் தோற்க வேண்டும் என்று இல்லை.கடந்த 15 ஆண்டு கால தமிழ் அரசியல் எனப்படுவது வெற்றியின் அரசியல் அல்ல. சிறிய தேர்தல் வெற்றிகள்,சில குறிப்பிட்டுச் செல்லக்கூடிய மக்கள் எழுச்சிகள் என்பவற்றிற்கும் அப்பால் தொடர்ச்சியான வெற்றிகள் அல்ல.அதாவது தமிழ் அரசியலை ஒரு புதிய கட்டத்திற்கு திருப்பக்கூடிய வெற்றிகள் அல்ல. எனவே தோல்வியைக் காட்டி பயமுறுத்தும் அரசியல்வாதிகள் தாங்கள் ஏற்கனவே தோற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்பதனை மறைக்கிறார்களா ?
கடந்த 15 ஆண்டுகாலம் தமிழ் மக்களுக்கு திருப்பகரமான வெற்றி எதையும் பெற்றுத்தரவில்லை.எனினும் காலம் ஒரு அரிதட்டு.அது பலரைத் தோலுரித்துக் காட்டிவிட்டது.பலரை அந்த அரிதட்டு சலித்துக் கழித்து விட்டிருக்கிறது. இப்பொழுது பொது வேட்பாளர் என்ற விடயமும் பலர் எங்கே நிற்கிறார்கள்? யாருக்கு விசுவாசமாக நிற்கிறார்கள்?யாரை சந்தோஷப்படுத்த எழுதுகிறார்கள்? போன்ற எல்லாவற்றையுமே தெளிவாக வெளியே கொண்டு வந்திருக்கிறது.
பொது வேட்பாளர் தோற்கக்கூடாது.உண்மைதான்.தோற்கக் கூடாது.அவ்வாறு தோற்கக் கூடாது என்று சொன்னால் அதற்காக தமிழ் மக்கள் கூட்டாக உழைக்க வேண்டும்.அதற்குத்தான் ஒரு பொதுக் கட்டமைப்பு உருவாக்கப்படுகின்றது. அரசியல் சமூகமும் சிவில் சமூகமும் இணைந்த ஒரு கட்டமைப்பை உருவாக்கும் பொழுது, இரண்டு தரப்பும் ஒன்றை மற்றொன்று பலப்படுத்தி அந்த முயற்சியை முன்னெடுக்கலாம்,அதேசமயம் தேர்தல் அரசியல் எனப்படுவது வெற்றியும் தோல்வியும் கலந்ததுதான்.
கடந்த 15 ஆண்டுகால தோல்விகரமான அரசியல் பாதையில் இருந்து தமிழ் அரசியலை திருப்பகரமான விதத்தில் தடம் மாற்ற ஒரு பரிசோதனை முன்னெடுக்கப்படுகின்றது. அதில் தோற்கலாம் வெல்லலாம்.ஆனால் அது பரிசோதனை.இப்போதிருக்கும் தோல்விகரமான பாதையில் இருந்து தமிழரசியலை திசை மாற்ற முயற்சிக்கும் ஒரு பரிசோதனை.எனவே தோல்வியைக் குறித்து அச்சப்படுவோர் அல்லது தோல்வியை காட்டிப் பயமுறுத்துவோர்,தாங்கள் ரகசியமாக “டீல்” செய்ய முயற்சிக்கும் அரசியல்வாதியின் தோல்வியை குறித்து கவலைப்படுகிறார்களா? அல்லது தமிழ் மக்களின் தோல்வியை குறித்து கவலைப்படுகிறார்களா?
ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் வேட்பாளர் வெல்லப் போவதில்லை.அவர் ஜனாதிபதியாக வரப்போவதும் இல்லை. ஆனால் அவர் தென்னிலங்கை வேட்பாளர்களின் வெற்றிகளைக் கேள்விக்கு உள்ளாக்குவார்.அதைவிட முக்கியமாக,தமிழ்ப் பொது நிலைப்பாடு ஒன்றை நோக்கி தமிழ் மக்களை ஐக்கியப்படுத்துவார்.அவர் தமிழ் தேசிய நிலைப்பாட்டை கொண்ட ஒரு வேட்பாளர்தான்.இலங்கை முழுவதற்குமான தமிழ் வேட்பாளர் அல்ல.
தமிழரசியல் கடந்த 15 ஆண்டுகளாக பிமுகர் மைய அரசியலாகத்தான் இருந்து வருகிறது.அதனால்தான் யார் அந்தப் பிரமுகர்,பொது வேட்பாளராக களமிறங்க போவது ? என்ற கேள்வி எழுகிறது.கட்டாயமாக அவர் ஒரு பிரமுகராக இருக்கத் தேவையில்லை.தேர்தலில் தனக்கு கிடைக்கும் பிரபல்யத்தை அடுத்தடுத்த தேர்தல்களுக்கு முதலீடு செய்யும் ஓர் அரசியல் விலங்காக அவர் இருக்கக் கூடாது.அவரும் அவர் பயன்படுத்திய பொது சின்னமும் எதிர்கால தேர்தல்களில் பயன்படுத்தப்படக் கூடாது என்ற ஒரு உடன்படிக்கைக்கு அவர் கட்டுப்பட்டவராக இருக்க வேண்டும்.
பொது வேட்பாளராக ஒரு பிரமுகரைத் தேடும் அனைவரும் ஏன் மற்றொரு அன்னை பூபதியை உருவாக்குவது என்று சிந்திக்கக்கூடாது? அன்னை பூபதி உண்ணாவிரதம் இருக்கும் வரையிலும் அவரை யாரென்று அநேகருக்குத் தெரியாது. ஆனால் 30 நாட்கள் அவர் உண்ணாவிரதம் இருந்து உயிர் துறந்ததன் மூலம் நவீன தமிழ் வரலாற்றில் அழிக்க்கப்பட முடியாத இடத்தைப் பெற்றார். அவ்வாறு ஜனாதிபதித் தேர்தலில் ஒரு பொதுத் தமிழ் நிலைப்பாட்டைக் கொண்டவர்கள் எல்லாருமாகச் சேர்ந்து மற்றொரு அன்னை பூபதியைக் கட்டியெழுப்ப முடியாதா?அவர் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதில்லை.யாரும் உயிர் துறக்கத் தேவையில்லை. உயிரைக் கொடுத்தது போதும்.தமிழ் மக்களை ஒரு தேசமாகத் திரட்ட ஒரு வேட்பாளர் வேண்டும்,
தமிழ் அரசியலை கட்சிகளும் சிவில் அமைப்புகளும் இணைந்த ஒரு பொதுகட்டமைப்பானது எதிர்காலத்தில் கூர்ப்படையத் தேவையான ஒரு பொதுத்தளத்தை அவர் பலப்படுத்துவார்.அதற்கு ஜனாதிபதித் தேர்தல் ஒரு களமாகப் பயன்படுத்தப்படுகின்றது என்பதுதான் இங்கு முக்கியம். தமிழ்ப் பொது வேட்பாளர் தமிழ்த் தேசிய ஐக்கியத்தைப் பலப்படுத்தும் ஒரு பரிசோதனை. அதில் எத்தனை முறை தோற்றாலும் அதைவிட வேறுவழி தமிழ் மக்களுக்கு உண்டா? ஏனென்றால் ஐக்கியப்படாவிட்டால் தமிழ் மக்களுக்கு அடுத்த கட்டமே இல்லை. அடுத்தகிழமை பதினைந்தாவது மே 18 வருகிறது.கடந்த 15 ஆண்டுகளாகத் தேங்கிப் போயிருக்கும் தமிழ் அரசியலை ; கடந்த 15 ஆண்டுகளாகத் தேய்ந்து கொண்டு போகும் கட்சி அரசியலை; கட்சிக்காரர்களிடமிருந்தே கட்சிகளைக் காப்பாற்றவேண்டிய ஒரு காலகட்டத்தில்; வடக்காய் கிழக்காய் சாதியாய் சமயமாய் இன்னபிறவாய் சிதறிக் கொண்டே போகும் ஒரு சிறிய மக்கள் கூட்டத்தை ஒரு தேசமாகத் திரட்டுவதைவிட உன்னதமான ஒரு நினைவுகூர்தல் உண்டா?