221
படைத் தரப்பினருக்காக காணிகளை சுவீகரிக்கும் நோக்கிலான அனைத்து காணி அளவீடுகளையும் தற்காலிகமாக நிறுத்துமாறு யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
யாழ் மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலேயே அமைச்சரினால் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு குறித்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.
பொன்னலை, திருவடி நிலை பகுதியில் தனியார் காணியில் நிலை கொண்டிருக்கும் கடற்படையினருக்கு குறித்த காணியை சட்ட ரீதியாக வழங்குவதற்கான அளவீட்டு பணிகள் மேற்கொள்வதற்கான முயற்சிகள் இன்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் மக்கள் எதிர்ப்பினால் கைவிடப்பட்டுள்ளதாகவும், இவ்வாறான படைத் தரப்பினருக்கான காணி சுவீகரிப்பு நடவடிக்கைகளை அனுமதிக்க கூடாது என்ற கோரிக்கையும் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரனினால் முன்வைக்கப்பட்டது.
இதுதொடர்பாக, நில அளவைத் திணைக்கள அதிகாரி மற்றும் கடற்படை அதிகாரி ஆகியோரின் கருத்துக்களை கேட்டறிந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த விடயம் தொடர்பாக ஜனாதிபதி உட்பட்ட உயர் மட்டத்தினருடன் கலந்துரையாடி ஒரு உறுதியான தீர்மானத்தினை மேற்கொள்ளும் வரையில் படைத் தரப்பினருக்காக காணிகளை சுவீகரிக்கும் நடவடிக்கைகளை நிறுத்துமாறு அதிகாரிகளுக்ளுக்கு அறிவுறுத்தியதுடன், படைத் தரப்பினால் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ள காணிகள் தொடர்பான விபரத்தினையும் தனக்கு சமர்ப்பிக்குமாறும் கேட்டுக் கொண்டார்.
Spread the love